புலிகளுக்குப் பின்னான தமிழீழ அரசும்,நாமும்!

தமிழீழத் தற்காலிக உள்ளக அரசின்அரசியற்றுறைத் தலைவர் விடுக்கும் அவசர வேண்டுகோள்:

பாசிசப் புலிகளுக்குப் பின்னான தமிழீழ அரசும்,நாமும்!

ன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே!,
முள்ளி வாய்க்காலில் பாசிசப் புலிகளோடு எமது மக்கள் வகை தொகையின்றி அழிந்துபோனார்கள்.இந்த அழிவு இன்று, இரண்டாவது நினைவுத் தட ஆண்டாக வந்து போயுள்ள நிலையில் நாம் தமிழீழ அரசுக்கான கட்டுமானத்தைப் பொறுப்பேற்கிறோம்.

எமது தேசம் அன்னிய இனங்களிடம் அடிமையாகக்கிடக்கிறது.

இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.புலிகளது அழிப்பு அரசியலானது நம்மை இத்தகைய நெருக்கடிக்குள் தள்ளியபோதும் புலிகளது புலம்பெயர் நிறுவனங்கள் மக்கள் சொத்தோடு தம்மைத் தலைமறைவாக்கி வரும் இன்றைய சூழலில், நாம் நாடுகடந்த தமிழீழ அரசோடு ஒரு இணைப்புப் பாலத்தை ஏற்படுத்தி எமது உரிமைகளைக் காக்கும் தற்காலிக உள்ளக அரசை நிறுவியுள்ளோம்.

நாம் நமக்கென்றொரு அரசையும்,பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் வர்க்க முரண்பாடுகளே காரணமாகிறது.இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி நமது மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதில் தமிழீழத்தின் தற்காலிக உள்ளக அரசானது சமீப காலமாகச் செயற்கரிய திட்டங்களோடு நகர்கிறது.புலிகள் விட்டுச்சென்ற பாரிய வெற்றிடத்தை நிரப்பும் செயற்றிறனோடு மேற்குலக வியூகங்களுக்கு முகங்கொடுக்கும் அரசியற் தத்துவக் கட்டுமானத்தையும் நாம் தொட்டியக்கும் இந்தத் தற்காலிக உள்ளக அரசானது இன்றைய சூழலில் அகரீதியான முரண்பாடுகளைச் செவ்வனவே பயன்படுத்தி மக்களை ஓரணிக்குள் கொணர்கிறது.

இந்த நகர்வானது நமது மக்களை வலுவானவொரு வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ளி வருகிறது.எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான போரை எண்பதுகளின் ஆரம்பத்தில் பற்பல குழுக்களாக இருந்த அமைப்புகள் முன்னெடுத்ததும் அதை சீரான முறைமைகளில் ஒருங்கமைத்து, வலுவாக்கி எதிரியை வென்றுவிட முடியவில்லை.எதிரிகள் பல ரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணித்தார்கள்.அவர்களுள் மிக முக்கியமான, தமிழ்பேசும் மக்களது எதிரிகள் பாசிசப் புலிகளே என்பது இன்று காலத்தால் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இது கடந்த இருபதாண்டுகளுக்கு முன் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.

இத்தகைய எதிரிகள்-அன்னிய நெருக்கடிகளால் எமது தேசத்தின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.இன்று, இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்படுத்தியபோது,அங்கே உதிரி இயக்கமாகவிருந்த தமிழர் தேசிய படையான நாம் வரலாற்றுப் போக்கில் தமிழ்பேசும் மக்களின் நிலப்பரப்புகளைக் கட்டுப்படுத்தித் தேசிய அரசுக்கானவொரு அரச கட்டமைப்பையும்,அதைக்காப்பதற்கான தேசிய இராணுவத்தையும் நிறுவிக் கொள்ள முயல்கிறது. இந்த வரலாற்று இயக்கப்பாட்டில் நமது தேசமானது தனக்கானவொரு அரசவடிவத்தையும்,பொருளாதாரப் பொறிமுறையையும் மெல்ல உருவாக்கிக் கொள்ள முயலும்!

இது காலத்தால் கருக்கொண்ட முரண்பாடுகளிலிருந்து தோற்றமுறுகிறது.

இந்த அரச வடிவத்தை-அரசுக்குரிய அனைத்து கட்டமைப்புகளையும் நமது தேசத்தில் நாம் இப்போது உருவாக்கிவருகிறோம்.

உலகுக்கு ஒரு இயக்கமாக இருக்கும் தமிழர் தேசிய இராணுவமானது உள்ளக மட்டத்தில் அரசவடிவமாகவும் இருக்கும் இன்றைய நிலையில், எங்கள் தேசத்துக்கான அரசினது தோற்றம் சாத்தியமாகியுள்ளது.இது உலக அங்கீகாரமற்ற நிலையால் வடிவத்தில் தேசிய விடுதலை இயக்கமாகவும்,உள்ளடக்கத்தில் அரசாகவும் செயற்பபடும்.அந்த முதன்மையான செயற்பாட்டை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் அவர்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது அரசியல் ஒத்துழைப்புடன் ஈழங்கடந்த வெளித் தொடர்புகளோடு இயக்கிவருகிறார்.இதை,ஏலவே நீங்கள் அறிவீர்கள்.நாம் பாசிசப் புலிகளது எச்சமாக உருவாக முடியாதென்பதைச் செல்வி ஜெயலலிதா அவர்களது வலுவான செயற்றிறனை நாடு கடந்த தமிழீழ அரசு உள்வாங்குவதிலிருந்தே நீங்கள் ஊகித்திருக்க முடியும்.

இதைப் புரிந்திடாத தமிழ் தேசிய அரசின் எதிரிகள் அந்த அரசை ஒரு சிறு குழுவாகவும்,குழு நலனாகவும் நமது உரிமைகளைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.இவர்களிடம் இருபதாண்டுகளுக்குமுன்னிருந்த கண்ணோட்டமே இன்றும் காணக்கிடக்கிறது.எமது போராட்டமானது பற்பல தடைகளைத்தாண்டித் தமிழ் தேசியத்தின் இருத்தலைச் சாத்தியப்படுத்தும் கட்டமைப்பை மெல்லக் கட்டியுள்ளது.

நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழீழமானது தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது தேசிய தற்காலிக உள்ளக அரசு பயன்படுத்துவதும்,அதை அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் ஒருமித்தபடி முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.

நாம் கடந்த கால எமது அரசியற் செயற்பாட்டிலிருந்து எமது தேசத்தையும்,அதைக்காக்கும் எங்கள் தேசிய இராணுவத்தையும் ,அரச-நிர்வாகக் கட்டமைப்பையும் சிதறவிடாது காத்தாகவேண்டும்.அன்னியச் சக்திகளின் கவனமெல்லாம் எமது அரச கட்டமைப்பையும்,அதைச் சாத்தியமாக்கிய இராணுவ வலுவையும் உடைப்பதே நோக்கமாக இருக்கிறது.

எமது தேசம் விடுவிக்கப்பட்டு வருகிறது.

அஃது,இலங்கைப் பாசிசச் சிங்கள இராணுவ ஆட்சியின் கீழ் இன்று தவிர்க்க முடியாதிருக்கும்.உலக நாடுகளாலும்,நாடுகடந்த தமிழீழ அரசாலும் அரசியல் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பாசிச அரசு தக்க சூழலில் நொருக்கப்படும். அதற்கானவொரு வாய்ப்பை அந்த கட்டமைப்புத் தனக்குள் வலுவாக வைத்திருப்பதால் இதை நாம் காப்பதற்கான நமது கடமைகளைச் செய்வோம்.

எமது சிந்தனைத் தளம் புனரமைக்கப்பட்டு,அது நிர்மாணிக்கப்படவேண்டும்.இந்த நிர்மாணம் எமது தேசிய இன அடையாளத்தின் இருப்பை வலுவாக நிர்மாணிக்க வேண்டும்.எமது வரலாற்றுத் தாயகத்தை நாம் நிர்மாணித்துவரும் இன்றைய காலத்தில் எங்கள் மனங்களும் புனரமைக்கப்படவேண்டும்.

„தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையே நமது மூச்சு“

வணக்கம்.

ப.வி.ஸ்ரீரங்கன்

(தமிழீழத் தற்காலிக உள்ளக அரசின்அரசியற்றுறைத் தலைவர்)

தமிழீழம்-ஜேர்மனி
22.05.2011

Werbeanzeigen

இன்று,இன்னுமொரு மே,மேய்-மே : 18 …

Mehr von diesem Beitrag lesen

மந்தைத் தெருவினில்…

மந்தைத் தெருவினில்…

„யாதும் ஊரே யாவரும் கேளீர்“ இரண்டாயிரம் வருடத்துக்குமுன் தமிழன், “ Edel,sei der Mensch,hilfreich und Gut“-Goethe „மனிதன் மேன்மையானவன்,கருணையும் சிறப்பும் நிறைந்தவன்!“பதினோழாம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த கோத்தே முதல் இன்றுஞ் சொல்லப்படும் மனிதமாண்பு மகா கேவலமாச்சு. இந்த மொழிவுகளுக்கும் பின்னால் நிகழ்ந்தவைகளுக்கும் என்ன சம்பந்தம் உண்டு?

கலைகள்-எண்ணங்கள்… முட்கம்பிகளுக்குப் பின்னே ஊசலாடும்!

இந்தத் தருணங்களைப் பற்றி எந்த மொழிவுகளோடு வருகிறோம்?

ஏதோவொரு தேவைக்காகப் பலவுயிர்களைப் பலியெடுத்துவிட்டு,மீளத் தகவமைக்கும்“துரோகி“ப் பட்டங்களுக்காக நபர்களைக் குறிவைக்கும் திசை தமிழுக்கான உயர்வைக் குறித்துக் கனவு காண்கிறதாம்.

மனித மொழிகள்அவனது எண்ணங்களைத் தெளிவாகச் சொல்வதற்குச் சேவிக்கிறது.எண்ணங்களைத்தானேதவிர எந்த உணர்வுகளையும் அது வெளிப்படுத்தும் ஊடகமில்லை!என்றபோதும்,அதன்வழியே தொடர்பாடலுஞ் செயலுக்குமான விளக்கும் பிறக்க வேண்டியுமிருக்கிறது.சமுதாயத்தின்-குழுமத்தின் நோக்கம் உலகைத் தொடர்புபடுத்திச் சொல்வதில் வார்த்தைகளே உடுத்திப் போர்க்கிறது.இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் தன்மைகளில் முழுமொத்த மொழியும் எதேச்சதிகாரத்துக்கிசைவாக மாற்றப்படுஞ் சந்தர்ப்பமே எனது விழிகள்முன் காண் செயலூக்கமாக விரிகிறது.

இயற்கைக்கும் மனிதர்களுக்குமான இடைச் செயலில் மனிதப் படைப்பைச் சுமக்கவேண்டிய இந்த மொழியை அன்றைய சிலுவையுத்தம் முதல் சமீப நாசிகள் வரை உதாசீனப்படுத்தியது ஓரளவு வரலாறாக நாம் காணும்போதும், நமது வரலாறு சொல்லப்படும் மொழி எத்தகைய முறைமைகளில் துஷ் பிரயோகப்பட்டுள்ளதென்பதைக் குறித்துப் பார்ப்பனியத்தை வைத்து வியாபாரப்படுத்திய நாம், நமது „தேசிய விடுதலை“ப் போரில் புலிப் பாசிசம் எங்ஙனம் மொழியைத் துஷ்பிரயோகித்து மனிதத்தைக் குதறியதென்பதையொட்டி மௌனிக்கிறோம்.

„விடுதலைப் புலிகள்“மொழியையும்,வார்த்தைகளையும் மட்டுமல்ல அதன்வழியான அனைத்துக் கலைவடிவங்களையும் இசையையும்-ஒலியையும் தமக்கான இருப்புக்கும்,தம்மை எதிர்த்த-எதிர்க்கும் மக்களுக்குமான கொலைக் கருவிகளாக்கியிருக்கின்றார்கள்.அதன் தொடர்ச்சியே இப்போது ஆங்காங்கே காணும் புலி-தமிழ்மக்கள் ஆதரவுக் கருத்தாகப் பொதுவரங்கில் கொட்டப்பட்டுவருகிறது.இந்த மொழிவுகளுக்குள் இருக்கும் வரலாற்று மோசடியானது ஏலவே கட்டயமைக்கப்பட்ட மொழித் துஷ்பிரயோகத்திலிருந்து நியாயமுறுகிறது.

கிட்லர் தனது எஜமானர்களுக்காக 32 இனக் குழுமங்களை இதன்வழி கொன்று நியாயப்படுத்தினான்.பதினொரு மில்லியன்கள் மக்களது உயிரைப்பறித்தபோது உலகத்துக்கு மொழியப்பட்ட உரைகளுக்குள் ஒதுக்கப்பட்ட நியாயம் இன்றும் பேசுபொருளாகப் புரட்டி எடுக்கப்படும் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நாமும் வாழ்ந்து சாகிறோம்.எனினும்,எமது மக்களுக்கு „ஈழஞ்“ சொல்லி உயிர்க் கொள்ளையிட்டவர்களோ தம்மீதான அனைத்துக் கிரிமினல் எத்தனங்களையும் அப்பாவிகள்மீது ஏவிவிட்டு வர்த்தகஞ் செய்யும் இந்தக் கொடுமையை எதிர்கொள்வதும்-புரிந்துகொள்ள முனைவதும் அவசியமில்லையா?

விடுதலைப் போராளிகள் சீருடையில் தம்மை எதிர்த்தவர்களையும்,தமக்கு ஆதரவு தரமறுத்தவர்களையும் வேட்டையாடிய ஒரு பயங்கரவாத அமைப்பின் அழிவில் அனைத்தும் முடிந்துவிடப் போவதில்லை!மீளவும்,அவர்களது மொழியைத் தூக்கியபடி அலையும் அவதூறாளர்கள் அதை மக்களுக்கான புரட்சி உரையாடலாக மாற்றுகிறார்கள்.இது ஆபத்தானது-அழிவுக்குள் நிரந்தரமாக நம்மைக் கட்டிப்போடவல்லதில்லையா?

மக்களது சுதந்திரத்தையும்,ஆன்ம இருப்பையும் மறுதலித்து அவர்களது அனைத்து வளங்களையும் கொள்ளையடித்த காட்டுமிராண்டி யுத்தம்-கொலைகள் முள்ளிவாய்க்காலில் கைமாறுவதில் அதே மொழி, மீளத் தகவமைக்கப்பட்டு மக்களை மீள அடிமைமைச் சேவகத்துக்குத் தயார்ப்படுத்துகிறதே!இது,எந்த நியாயத்தை மக்கள்மீது பொழிகிறதோ அதே நியாயம் தமது தலைக்கே திரும்புமென்பதை இலங்கைப் பாசிச அரசு புரிந்துகொண்டிருப்பினும் அதன் இருப்புக்கு இந்த அழிவுவாத அடக்குமுறை மொழிவுகள் அவசியமாக மேலெழுகிறது.அவ்வண்ணமே நமது „புரட்சி“க்காரர்களுக்கும் இது அவசியமாக இருக்கிறது!

இங்குதாம் கலையும்-எண்ணங்களும் இதற்கெதிரான கூரிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்றப்பட்டு, அந்த மொழியை முதலில் விடுவித்தாகவேண்டும். தமிழ்ச் சூழலுக்குள் இத்தகைய எந்த உரையாடலும் இதுவரை மக்களது நலனிலிருந்து எழவே இல்லை!கலையும்-எண்ணமும் ஏதொவொரு அதிகாரத்துக்கிசைவாகக் கட்டியமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாம் கூறுகிற அனைத்து எதிர்க் கருத்தாடலும்-கதையாடலும் அதே பாணியில் மொழியைத் துஷ்பிரோயாகஞ் செய்கிறது. இது சமீப காலமாகத் தமிழுக்குள் எழுந்த அனைத்து ஆக்க இலக்கியத்துக்கும் பொருந்திப் போகிறது.ஒன்று புலிச்சார்பு அல்லது உலக-இலங்கை அரச ஆதிக்கத்துக்குச் சேவையாற்றும் பிரயத்தனத்தில் ஈடுபாடுகொள்கிறது.

இனிவரும் பொழுதேனும்,இத்தகைய குறுகிய நோக்ககங்களைக்கடந்து,புலிப்பாசசத்தின் இருண்ட பக்கங்களையும்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தினது உலகளாவிய கூட்டோடிணைந்த மக்கள் விரோத அனைத்து முகங்களையும் பெறுமதிமிக்க மொழியைக் கூரிய ஆயுதமாக்கி எதிர்த்தெழுவேண்டியுள்ளது.

இதுவரை எந்தவொரு தமிழ் நூலும் மக்கள் பக்கத்தின் சாட்சியமாக இருக்கும் அருகதையையும் பெறவே இல்லை!மக்களது வலியைப் பேசுவதாகச் சொல்லப்படும் உரையாடல்கள்,கதைகளெல்லாம் தமது எஜமான விருப்புக்கிசைவாகவே மொழியைத் துஷ்பிரயோகஞ் செய்துகொண்டிருக்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
ஜேர்மனி
15.05.11

1 May 2011:சிந்தி-ரோமா மக்களுக்காக…

சிந்தி-ரோமா மக்களுக்காக…

யிரம் பேர்கள் ஊர்வலத்திலும்,இறுதி நிகழ்வில் 5000 பேர்கள் வரை திரண்ட இந்த(01.05.2011) மேதின ஊர்வல நிகழ்வில் வழமைபோலவே நான் எம்.எல்.பி.டி.( MLPD )கட்சி ஒலிவாங்கியில் உரையாற்றினேன்.இவ்வாண்டினது கோசங்கள்,பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக் குறித்தானதாக இருந்தபோது,பொருளாதாரப் பேராசிரியர் றுடேல்ப் கிக்கல் ( Rudolf Hickel von der Universität Bremen_பிறீமன் பல்கலைக் கழகம் ) மிகச் சிறந்த உரையொன்றைச் செய்தார் (அவருக்கு கரங்கொடுத்தபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு 50 யூரோ பணத்தை அவரது கையுக்குள் திணித்தனர்,அவரோ வேண்டாமெனும்போது, உங்கள் பிரயாணச் செலவுக்கென்றனர்).எப்பவும்போலவே இம்முறை இலங்கைப் பிரச்சனை குறித்து என்னால் எதுவுமே பேசமுடியவில்லை!


எனது மனத்திரையெங்கும், உலகெங்கும் நசிபடும்-பாதிக்கப்படும் அந்த மக்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டுமென அவா ஏற்ப்பட்டது!

எந்தத் தலைமையுமின்றி-கேட்பாருக்கு நாதியின்றித்தவிக்கும் ஒரு மகட்டொகுதி குறித்துக் கவனயீர்ப்பு செய்யவேண்டுமென்றே கடந்தசில நாட்களாக உறுதிபூண்டேன்!எங்கள் மக்களுக்காவது ஒரு டக்ளஸ்-சோ அல்லது சம்பந்தனோ,நாடுகடந்த தமிழீழ அரசோ இருக்கும்போது, இந்த மக்களை பிரான்ஸ் சாவதிகாரி சார்கோசி படாதபாடு படுத்தினான்-நாடுகடத்தினான்.போதாக் குறைக்குக் கங்கேரி தேசத்து நவ நாசிய அரசோ அவர்களை வீடுவீடாகச் சென்று நரவேட்டையாடியபோதும் கங்கேரியை ஐரோப்பிய கூட்டமைப்புக்குள் வைத்திருக்கும் ஐரோப்பியப் பாராளுமன்றமோ வாயே திறப்பதில் பின் நிற்கும்போது,அவ்வப்போது ஸ்பீகல் ஒன் லையின் சஞ்சிகை கட்டுரை போட்டதைத் தவிர வேறெதும் நடக்கவில்லை!

இரண்டாம் உலகயுத்தத்துக்கு முதலே நர வேட்டையாடப்பட்ட சிந்தி-ரோமா மக்கள் அவர்கள்!அன்று,ஜேர்மன் கைசர்,துருக்கிய ஒஸ்மானியப் பேரரசு முதல் கிட்லர்வரை அவர்களை வேட்டையாடியபோது,இப்போது, பிரான்ஸ்,கங்கேரி அரசுகளென அவர்களை நரவேட்டையாடும்இந்த இனத்துவச் சுத்திகரிப்புக் குறித்து எவருக்குப் புரியும் அவர்களது வலி?

[மேதின ஊர்வலத்துள்…]

சிந்தி-ரோமா மக்கள் இந்தியாவின் தலையில் உதித்தவர்கள்.நாமோ பாதத்தில்.இருந்தும் எமது மக்களெனக்கொண்டு நாலுவார்த்தை சொல்ல எவருமே இன்றிக்கிடந்த இந்த மேதினத்தில் நான் கவனயீர்ப்பாகக் கருத்துக்களை வைத்தேன்!

லிபியாவில் இருபது மக்கள் கொல்லப்பட்டபோது, அந்த அரசையே கலைப்பதற்கும்,ஆட்சி மாற்றஞ் செய்யவும்,ஐ.நா.1973 சாசனமிட்டுப் படையனுப்பிக் குண்டெறிந்து, „மனிதாபிமான“ப் போர் செய்வதும்,கங்கேரியில்-பிரான்சில் பலாத்தகாரப்படுத்தப்பட்டுக் கொன்றும், தேசம்விட்டு நாடு கடத்தியும் நாளும் அவலப்படும் இந்த மக்கட் கூட்டத்தை எவருமே கவனங்கொள்ளவில்லையென்றும்,ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட நவ பாசிச அரசான கங்கேரியின் ஆட்சி அதிகாரத்தைப் பார்வையாளராகக் கண்டிக்கும் ஐரோப்பியக் கூட்டமைப்பின் அயோக்கியத் தனத்தை அம்பலப்படுத்தியும், நான் கவனயீர்ப்பு உரையைச் செய்தேன்.வீதியெங்கும் எனது உரைக்குப் பின்பாகப் பலர் அந்த மக்களுக்காவும் குரல் கொடுத்தபோது எனது நோக்கத்தின் நிலை வெற்றியடைந்தது.

ஊர்வலமாகச் சென்ற எனது தேசத்தவர்கள் வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.மூன்று புலிக்கொடியும்,முப்பது பேர்களுமாகச் சுருங்கிய எனது தேசத்தவர்களது ஊர்வலம் இறுதியில்,புரியாணி,அப்பம் சுட்டு விற்கும் கடையில் மையங்கொண்டது.

ஈ.ஜீ மெற்றால் [IG Metall]தொழிற் சங்கத் தலைவரது (Klaus Reuter
Vorsitzender DGB-Region)வாயிலிருந்து வழமைபோலவே „தமிழர்களுக்கு நன்றி“ என்ற வார்த்தை மட்டும் வந்தது.இந்த நன்றி எதற்கானதென நான் அறியேன்.

சிந்தி-ரோமா மக்களது நிலைக்கொப்பவே நாம் சென்றாலும் நம்மை வழி நடாத்துபவர்கள் வர்த்தகஞ் செய்வதிலேயே கவனப்பட்டுக் கிடப்பதை நான் பலமுறை கண்ணாற் பார்க்கிறேன்.இந்த மேதினத்திலும் இதுவே கதை!

[Sahra Wagenknecht]

இந்த ஊர்வலத்திலும்,இறுதித் தட்டி-தள[Die Linke-Stand] விளம்பரத்திலும் நான் மிக முக்கிய இடதுசாரித் தோழர் சாரா வாகன்கினெக்ற்றைச் [ Sahra Wagenknecht ]சந்தித்தேன்.அம்மணியைப் பார்த்துக் கண்கலங்கியும்,“நீ ரோசா லுக்சம்பேர்க்காக மாறவேண்டும்,ஏனெனில், நாம்(உலகத் தொழிலாள வர்க்கம்)தாயை இழந்த குழந்தைகளாக இருக்கிறோம்,எமது போராட்டத்தை ஒரு ஒழுங்கமைந்த கட்சி வழி நடாத்தத் தவறிவிடுகிறது சாரா,நீ,ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அதிர்வுகளைச் செய்வதில் வல்லவள்.உனது காலத்தில் நீ,எனக்கு ரோசா லுக்சம்பேர்க்“ என்றேன்.தன்னை நிதானப்படுத்திய சாராவோ, „தோழனே,நான் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.என்மீது வைத்திருக்கும் மதிப்புக்கு நன்றி“ என்றாள்!இன்றைய ஜேர்மனியில் சாரா வாகன்கினேக்ற் மிக நிதானமான அறிவாளி.அவர் தி.லிங்க [ Die Linke]கட்சியின் உப தலைவர்.ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர்.தலைசிறந்த பொருளாதார நூல்களை எழுதியவள்,மிகச் சிறந்த மார்க்சியரைச் சந்தித்துக் கரங் குலக்கும்போது எமது அரசியல் நிலவரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது.

இப்படியாக,இன்றைய மேதின ஊர்வலம் சில நோக்கத்தை மீள வலுப்படுத்தியது.இது,எனது செயற்பாட்டின் இன்னொரு முனை வெற்றியாகவே நான் பார்ப்பதில்,ஜேர்மனிய மார்க்சிய-லெனியக் கட்சிக்கே[ MLPD] அனைத்து மாண்பும் சேரும்.அவர்களே,வருடா வருடம் தெருமுனை உரையாடலுக்கு எனக்கு ஒலிவாங்கி தருவதும்,என்னை ஜேர்மனிய மக்கட் குழாத்தோடு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அனுமதிப்பவர்கள். சர்வதேசியத்தை உயர்த்திப்பிடிப்பதில் அந்தத் தோழர்களது மனவுறுதிக்கு முன் நான் கூனிக் குறுகுகிறேன்! ஏனெனில்,நாம் தமிழர்கள்,எந்த மக்களுக்காவும் இதுவரை குரல் கொடுக்கவும் இல்லை! எவருடனும் தோழமையையும் கொண்டு உரையாடுவதும் இல்லை! இதுவே,இன்றைய டுசில்டோர்ப் [Düsseldorf ] மேதின ஊர்வலத்திலும் தொடர்கதையானது.

என்னே நம் போராட்டப் பாசறை அனுபவம்!புலிகளுக்குக் காவடி எடுத்தவர்கள் இறுதியில் மூன்றே மூன்று புலிக்கொடியுடன் சங்கமமானார்கள். முன்னூறிலிருந்து முப்பதாகவதைக்கூடக் காணத் தவறும் நம்மவர்கள்,அப்பம் சுட்டு விற்பதில் தமிழீழத்தைக் கண்டடைந்தனர் இன்று.

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
01.05.2011

%d Bloggern gefällt das: