சனல் 4: ஆவண விவரணமும்…

சனல் 4: ஆவண விவரணமும்,மறைக்கப்படும்அரசியலும்-என்ன?

லங்கையைவிட்டுப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும்நாம் யார்?, தமிழர்கள்?, போதுமா இந்த அடையாளம்-“ புலிகளுக்குப் பின்னால் கோசம் போடுவதுகூட எமது மக்களுக்கானதாகாதா?“ – கேட்பீர்கள்!

அப்போ, நிறுவனங்களின்,இயக்கங்களின்,அரசுகளின் அடிமைகளா?

அல்லது, நம்மைப் புரிந்துகொண்டு நமது விடுதலைக்குகந்த கல்வியின்,கேள்வியின்மூலம் நம்மை வளர்த்தெடுத்து ,இத்தகைய நிறுவனங்களுக்கெதிராகப் போராடப் போகின்றோமா?

இவை கேள்விகள்.ஆனால், நாம் சிந்தித்துச் செயற்படும் காலமே நமது விழிகள்முன் நிழலாடுகிறது.

சனல்4 மிக நேர்த்தியாகப் போர் குற்றத்தைக் குறித்தான அனைத்து வழிகளிலும் சேகரிக்கப்பட்ட தரவுகளை நமக்குமுன் கொட்டியுள்ளது.அப்பாவி மக்களது துயருள் சம்பந்தப்பட்ட இரண்டு இராணுவ ஜந்திரங்களுக்கிடையிலான பலப்பரீட்சையில் தோற்கடிக்கப்பட்ட தமிழ்ப் பாசிச இராணுவமானது சிங்கள இராணுவ ஜந்திரத்தால் நிர்மூலஞ்செய்யப்பட்டபோது,சிங்கள இராணுவமானது ஜனநாயகப் படுகொலையைச் செய்துள்ளது.சுமார் 60 ஆண்டுகால அரச நிர்வாகக் கட்டமைப்புடைய இலங்கைப் பாராளுமன்றச் சட்டவாதிக்கமானது இவற்றைத் திட்டமிட்டு நியாயப்படுத்தும் சந்தர்ப்பத்தில் சனல் 4 ஆவணப்படமாக இலங்கைப் படுகொலைக் களத்தையும் மீள,மீளக் கொணர்கிறது!

வழமைபோலவே,புலி அநுதாபிகளுக்கு இது ஏற்புடையதாக இருக்கவில்லை!தமது மதிப்புமிக்க சேனைத் தலைவரது மூளையைக் குடைந்து பரிசீலிக்கும் சிங்கள வன்கொடுமை இராணுவத்தின் திமிரை உள்வாங்குவதில் அவர்களுக்கு மனத்தளவில் பல தடைகள் இருக்க முடியும்.அதுவும்,அவமானமாகவும் இருப்பதற்கானவொரு புள்ளியில் பிரபாகரனது பிணத்தை அவர்கள் அம்மணமாக்கியும் வைத்திருக்கிறார்கள்.இது,சிங்கள வரலாற்று மனவியல்புக்கொப்ப நிகழ்ந்தவொரு பாசிசச் சேட்டையாகவே இருக்கிறது.“கனக விஜயனின் முடித் தலை நெரித்துக் கல்லினை வைத்தான் சேர மகன்“ என்றும்,“அநுராதபுரத்துள் சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டினேன்“என்றும் தமிழ்த் தரப்பு வீரம் பேசியது. இது மாற்றுச் சமுதாயத்தோடு இசைந்து வாழத் தகமையற்ற உச்சாடனங்களாகவே மேலும் விரிந்துகொண்டன. இத்தகைய உச்சாடனங்களுக்குப் பின்னால் நிகழ்ந்த ஊக்கமானது உயர்தட்டு வர்க்கத்தின் அதிகாரப் போட்டிக்கேற்க மக்களைத் தயார்ப்படுத்தும் மிகக் குறுகிய நலன்களைக் கொண்டியங்கிக் கொள்கிறது. இது,புலிகளது கடந்தகால ஆயுதப்போராட்டத்திலும் கணிசமாகவே இனங்காணத் தக்கதாகவிருந்தது!புலம் பெயர் மக்களிடத்திலும் இது தொடர்கதையாகவேண்டுமா?

புலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது,அது சொந்த மக்களுக்குச் சவக்குழிவெட்டி ஓய்ந்தபோனவொரு அராஜகக் குழுவாக மங்கிக்கொண்டிருந்ததை வரலாற்றின் வெளிச்சத்தில் உரசிப்பார்த்தால் தெளிவு பெறலாம்.இந்தச் சனல் 4 வெளிப்படுத்தும் ஆவணப்படங்கள், காட்சிகள் அனைத்தும் ஏலவே நாம் பார்த்தவை.எனினும்,அதையிட்டுப் புலிவிசுவாசிகள் நம்பத் தயாரில்லாதிருந்தார்கள்.எனவே,தமது சரிவுகளை நியாயப்படுத்தும் முகமாகப் புலிகளது பேரவாவாகப் புலிகளின் தலைவனை உயிருடன் காத்துப் பதுக்கி வைத்திருப்பதாகவும்,அத்தகைய படங்கள் போலியானவையென்றும்கூறி இலங்கைப் பாசிச அரசின் படுகொலை அரசியலை வெளியுலகில் நியாயப்படுத்தும் காரியத்தில் அறிந்தே செயற்பட்டனர்.

இப்போதைய இந்த ஆவணப்படமானது இலங்கையில் இனவழிப்பு நிகழ்ந்துள்ளதென்பதைச் சொல்லாமற் சொல்கிறது. அதுள்,சரணடைவுகொண்ட புலித் தலைமை யுத்த விழுமியங்கட்கு அப்பால் படுகொலை செய்யப்பட்டுக் கடலில் வீசி எறியப்பட்ட மிகப் பிற்போக்குச் செயலையும் கண்டிப்பதில் மக்களைக் கைகோற்கக் கோரிக்கொள்கிறது.

தமிழர்கள் புலம் பெயர்ந்து மேற்கில் ஒரு ஒட்டுண்ணிச் சமூகமாக வாழும் இந்தச் சந்தற்பத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது புலி அரசியல்-போராட்ட நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இவர்கள் வழமைபோலவே பிழைப்புவாத அரசியலுக்கேற்பச் சனல்நான்கினது ஆவணப்படத்தைக் கண்டுகொள்ளாதிருக்கின்றனர்.அல்லது, அதை அங்ஙனம் தவிப்பதால்(அது குறித்துப் பொது வெளியில் உரையாடாது)தமது புலிகளது எச்சங்களுக்கு மீளவுமொரு முண்டுகொடுத்துப் புலம்பெயர் தேசத்தில் மக்களை முட்டாளுக்கும் அரசியல் சதிக்கு உடந்தையாகிக்கொள்கின்றனர்.

புலியினது அப்பட்டமான மக்கள் விரோதக்கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற „கருத்தின்பால் உந்தப்பட்ட“ மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனூடாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே, நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.இவர்களுக்குப் புலிவழி புனையப்பட்ட அல்லது இட்டுக்கட்டபட்ட „தமிழ்சமுதாயம்-விடுதலை“ என்பது தமது விருப்பத்தின் கருவாக இருப்பதை எப்பவும்போலவே“தமிழீழ விடுதலை“என்று, கனவுலகத்தைத் தயார்ப்படுத்தி உண்மைகளை ஏற்பதில் சிக்கலாகிறது!இது ஒருவகை உள நோய்!

ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கஞ்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:அன்று,புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்தவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிக்கத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்களே,புலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது வயிற்றிலடித்து,புலித் தலைவனைக் காக்க வீதிக்கு இறங் கினார்கள். அப்போதும், மக்களைச்சாட்டி ஒரு விவேகமற்ற கபட அரசியல் வீதிக்கு வந்தது.அது,உண்மையற்ற புலிக் கூட்டத்தின் அரசியலென்பதை உலகம் உணர்ந்தபோது தோற்றுக் கொண்டது.

இப்போ,இந்தவுலகம் தனது நலங்கட்கு அமைய இந்த ஆவணப்படங்களது மூலமாக இலங்கை அரசின் பாசிசத்தை வெளிசமிட்டுக் காட்டுவதற்கு எங்கள் மக்கள்மீது இலங்கை அரசு-புலிப்பாசிசம் ஏவிய இராணுவ யுத்தம் காரணமாகிறது.இந்த யுத்தக் குற்றமானது இலங்கை அரசு மேற்குலகத்தைச் சார்ந்திருந்தபோது எப்பவும்போலவே மறைக்கப்பட்டிருந்தது.இப்போது,ஆசிய-மேற்குலகப் பொருளாதாரச் சந்தைப் பிளவுகளது நெருக்கடியுள் தோற்றமுறும் புதிய முரண்களுக்கமையத் தமது நலன்களது தெரிவாக நமது மக்களது அழிவுகள் அரசியலாகிறது.இதை வெளிப்படையாக இனங்கண்டு, அதன் உண்மைகளது திசைவழியில் நாம் பயன்படுத்தும் அரசியல் என்ன?

இது, குறித்து விரிவாக விளங்கிக்கொள்வது அவசியமில்லையா?

அல்லது,வழமைபோலவே இந்த மேற்குலகச் சார்பு அரசியல் வழித் தனிநபர் இலாபங்களுக்கமைய எமது மக்களது அழிவையும்,அந்த அழிவின்வழி பெறப்பட்ட அடிமை வாழ்வையும் பயன்படுத்திச் சொந்த இலாபங்களைக் கண்டடையப் போகின்றோமா?

சனல்4 ஆவணமாகத் தயாரித்த எமது மக்களது யுத்தவாழ்வு கற்பிக்கும் பாடமென்ன?புலிகளது வரலாற்றுக் கொடுமையிலிருந்து வெளிப்படும் குருதிக்குச் சரியான-நியாயமான அரசியல் அர்த்தம் உண்டா? இக் கேள்விகளைத் தட்டியுதைத்தெறிந்துவிட்டு,மீளத் தலைவருக்கு ஆலவட்டம் காட்டும் மனப்பாங்கானது தனித்தன்மை அபிவிருத்தியை(உண்மைகளைக் கண்டடையத்தக்க ஆய்வு மனம்) வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது.இங்கே, நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக் கட்டுமானம், பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவு கொள்கின்றபோது, அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு பாசிச அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுக்கீடுமின்றிச் செய்கிறது.

அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை,மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம்.இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது.இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப்பூர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில் போய்முடிகிறது! சனல் 4 காட்டும் ஆவணமானது இத்தகையவொரு சூழலில் மேற்குலக அரசியலுக்கேற்ப,அவர்களது நலனுக்கானதெரிவுகளில் சில வினையாற்றல்களைக் கோரிக்கொண்டிருக்கிறதேயொழிய நமது மக்களது அழிவுக்கும்,அதுசார்ந்த நியாயமான அரசியல் தீர்வுகளுக்கும் இதைச் சாத்தியமாக்கும் வலு நமது புலம் பெயர்ந்த மக்களாற்றாம் முடியும். இதைப் பயன்படுத்தும் முறைமைகளில் புலிகளைக்கடந்தவொரு மகள்திரள் அமைப்பு உருவாகுமானால் அதுவே, பாசிசப் புலிப் புரளிகளைப் பின் தள்ளி நிலத்திலுள்ள மக்களுக்காக உண்மையாக அரசியல் செய்யும் ஒரு அறத்தை நமக்கு வரலாற்றில் தரும் சந்தர்ப்பத்தைக் காலம் கனிய வைக்கும்.

எனவே,புலம்பெயர் மக்கள் பிழைப்புவாதப் புலிகளைத் தவிர்த்து இயங்கும் தேவை அவசியமானது.

ஏனெனில்,புலம்பெயர் பினாமிப் புலிகளுக்கும்,பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது.இங்கே நிறுவனப்பட்ட புலிச் சிந்தனைப்பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும்தமது இயக்க நலனுக்காகக் கட்டுப்படுத்துவதும்,அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் புலம்பெயர் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் (சுயமாக மக்களை இயங்க அனுமதிக்காமை) அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை.எனவே,புலிகளது பரப்புரைகளைக்கடந்து பிரபாகரன் மரணத்தையும்,அவர் கொலை செய்யப்பட்டதையும்விட,மக்களது அழிவுகளைக் குறித்து வெளிப்படையாகப் பேசப்பட்ட இந்தச் சனல் 4 ஆவணத்தின்வழி ஒரு மக்கள் திரள் அரசியலூக்கம் கருக்கொண்டு,வெளியுலக மக்களரங்குக்கு வருமானால் அதுவே,தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கானவொரு அரசியல் உந்துதலையும், போராட்டவுணர்வையும் மீளத் தகவமைத்துக்கொள்ளும். இது,நிலத்திலுள்ள மக்களே தமது அடிமை விலங்கை ஒடிக்கும் எழிச்சிக்கு உந்துதலாகவெழவும் முடியும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
16.03.2012

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: