41 வது ,இலக்கியச் சந்திப்பு…

41 வது ,இலக்கியச் சந்திப்பு இலங்கையில் நடப்பது அவசியமே!

[சுசீந்திரன்-சிவலிங்கம் போன்றோரது கருத்துக்கள்மீதான மாற்றுக் கருத்தாடல்].

லன்டனில் நடந்தேறிய 40 வது இலக்கியச் சந்திப்புக்குப் பின் 41 வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடாத்தவேண்டுமெனத் தொடர்ந்த கதையாடல்கள் இப்போது சந்திக்கு வருகின்றன.இங்கே, குழுவாதம் மேலும் நெருக்கடிக்குள் நகர்த்தும் தமிழ்த் தேசியவினத்தின் ஓரளவான சனநாயகப்பண்புக்குடந்தையான இச்சந்திப்பைத் தொடர்ந்து, சிதைத்துவரும் இந்தக் குழுவாதமானது இன்றுச்சத்தில் வளர்ந்து கிளைபரப்புகிறது?.

திரு.சிவலிங்கம் மற்றும் ,நண்பர் திரு.சுசீந்திரன் போன்றோர் தமது கருத்துக்களைப் பதிவுசெய்திருக்கின்றனர்.இருவருமே குழுவாதத்தின் சதித்தனமான அணிச் சேர்க்கைகள் குறித்துப் பேசுகிறார்கள்-வரவேற்கப்பட வேண்டியது.

இத்தகைய குழுவாதமானது கடந்த நான்கு-ஐந்து சந்திப்புக்குள் வலுவாகவும்-வேகமாகவும் வளர்வதற்கான தோற்றுவாய்கள் மெல்லத் தலித்துவ,சாதிய-பெண்ணிய அடையாளங்கட்குட்பட்ட  நலன்களது தெரிவில் -இலங்கை ஆளும் வர்க்க நிகழ்ச்சி நிரலை – இந்திய நலன் மற்றும் லொபிக் குழுக்களால் மிக நேர்த்தியாக நமக்குள் திணிக்கப்பட்டதைக் கடந்த  2005 ஆம் ஆண்டுகளிலிருந்து „நாம் நேர்மையான முறையில் அரசியலைக்கொண்டிருந்தால் “ கண்டடைந்திருப்போம்.

இது, காலங் கடந்த ஞானமாகவே திரு.சுசீந்திரனது கருத்துக்களிலிருந்து  தொகுக்கமுடியும்.இதுவரை இத்தகைய குழுவாதத்துள் இலக்கியச் சந்திப்புச் சிதைவதைக் கவனத்துள் எடுக்காது அத்தகைய ஓட்டத்தோடு ஒத்தோடிய நண்பர் சுசீந்திரன் இப்போது, இது குறித்துக் கருத்துச் சொல்வது இந்த நெருக்கடியின்  வன்மத்தை உண்மையாவுணரவைக்கிறது.என்றபோதும் , இதன் அரசியல் என்ன?-தெரிவுகள் என்வென்பதைக் குறித்து நாம் பார்த்தாகவேண்டும்.

இன்றைய  கட்டத்துள் புலம் பெயர் எதிர்ப்பிலக்கியப் பாரம்பரியத்தின் அறிவின்மீது,மொத்தக் குத்தகைச் செய்தவர்கள், இந்தத் தளத்தின் மீது எவரொருவர் அறிவாந்த தேடலையிட்டுக் கொள்ள முனைந்தாலும் அந்தத் தேடல்மீதான எதிர்ப் போக்கான மறுதலிப்பின் வினையாற்று குறிப்பிட்வொரு தளத்தில் தன் தர்க்கத்துக்குமாற்றான கருதுகோளை -அதன் உச்ச பச்ச நிராகரித்தலூடாய் இருப்பிழக்கத்தக்க பனுவல்களாக மாற்றவதிலும்,குறுகிய மனத்தளவான மதிப்பீடுகளின் மாதிரிகளைக் கொண்டு, வெற்றிடத்தை நிரப்புதலில் இதுகால வரை காலத்தைக் கடத்திவருகிறது இந்த இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும்.இது ,40 வது இலக்கியச் சந்திப்புள் வலு உச்சத்திலிருப்பதைக் காணக் கூடியதாகவே இருக்கின்றது.தம்மைத் தாமே தலைமைத்துவ வடிவமாகவுணரும் அதிகாரத்தை இவர்கள் கைக் கொண்ட தருணமானது ஒருவித அரசியற்றொடர்ச்சியை இலங்கைக்குள் வலிந்து காணுமிடத்துள் இவர்களது தெரிவு, இலங்கைக்குச் சந்திப்பை நகர்த்துவதில் குறியான எதிர்ப்பார்ப்பானது அதற்கான தெரிவுகளில் அணிகளைக் கட்டியமைத்தது.அதுள், „தலித்தியம்-சாதிய மார்க்சியம் “ எனப் பல மானுடவிரோதக் கருத்தாடல்களை இதன் எதிர்ப் பாளர்களுக்கு அது வலிந்து போர்த்தியபோது இன்றைய இலங்கையின் பிளவுவாத அரசியலது உச்சம் புலம்பெயர் மக்களுக்குள் இடறிக்கொண்டதை நாம் உணர்கிறோம்.

இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இது, அடக்குமுறையாளர்களோடு, ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,அபிவிருத்தியினதும் பெயரில் தொடர்கிறது.இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே „தீர்மானங்களும் „-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப்படுகின்றனர். இத்தகைய நோக்குக்கு இலங்கையில் தொடரும் இலக்கியச் சந்திப்பானது புத்திமட்டத்தில் வலுவான கருத்தியலை ஊன்றமுடியும்.தமிழ்த் தேசியவினத்தின் இதயத்தைக் குதறும் அரசியலைத் தொடரும் இன்றைய தமிழ் அரசியல் நடாத்தையுள் இது, மற்றொரு தெரிவு.இதற்குள் சிக்குப்பட்ட பிழைப்புவாதத் தலித்துவ-குழுவாத,இயக்கவாத மாயைக்குட்பட்ட  நபர்கள்-குழுக்கள் ,தமது அராசக அரசியலைத் தொடர்ந்து, உதயன் பத்திரிகையை நெருப்பூட்டியெரிப்பதிலிருந்து மீளவுருவாக்கும்  வன்மைத் தனமான அரசியலுள் இலக்கியச் சந்திப்பும் சிக்குண்டே போனது.

இலண்டன் 40வது இலக்கியச் சந்திப்பின் தற்காலிகத் தலமையானது இலங்கையின் அரசியல் சூழ்ச்சியோடு ஒன்றித்தே இயங்கிக்கொண்டிருக்கிறது.இதுள் ,இராகவன் என்ற தனி நபருக்குப் பின் பலர் தம்மை இனங்காட்ட மறுக்கின்றனர்?.

இத்தகைய பண்பினது விருத்தியே மாற்றுக்கருத்தாளர்களை மிகவும் பிளந்து குறுகிய இழி நிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.

பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் ,தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும்  கடந்தகாலத்துள் இருந்தார்கள்.அவர்களுள் நண்பர் சுசீந்திரனும் ஒருவராகவே இருந்தாரென்று குற்றஞ் சுமத்தாதுபோயினும் எனது உணர்வுக்கு அப்படியேதாம் படுகிறது!இந்த இழி நிலைக்கு மாற்றான தெரிவுகளை இனங்காணவேண்டிய சந்தர்ப்பத்தை இத்தகைய பண்பே இல்லாதாக்கியது!

இன்று, இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் போராட்டச் சூழலில் இலங்கையில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு, இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையுள் மிக நெருங்கிய உறவுடைய நாடான இந்தியாவின் கபடத்தனமான பொருளாதார ஆர்வங்கள் இலங்கையைக் கூறுபோட்டுக் காரியமாற்றுவதல்ல.மாறாக, இனங்களின் -பிரதேசங்களின் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி அந்தந்த இனத்தின் வீரியத்தை-படைப்பாற்றலை முழுமையாக அழித்து அந்தத் தேசத்தை முழுமையான தனது அரசியல் ஆதிக்கத்துக்குள் நிலைப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.,சாதிய வாதம்-தலித்துவம் மற்றும் பிரதேசவாதம் உச்சத்துள் வைத்துக் கருத்தியற்றளம் உருவாக்கப்படுகிறது.இதுவே, சாதிய அடையாளத்தைத் சுதேசி அடையாளமாக ஏற்கவேண்டுமென ஆய்வும் செய்து ,இந்தியாவில் இருப்புற்ற  நிறவனப்பட்ட வடிவமாகச்  சாதிய அடையாளத்தைக் கோருகிறது.இதற்குத் தோதாகவேதாம் புலம்பெயர் தலித்துவக் குழுக்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றனர்.இவர்களது தெரிவில் ,வகுக்கப்படும் இந்தச் சதித்தனமான அரசியலானது பரந்துபட்ட மக்களுக்கு எதிராகவே தொடர்கிறது.

எனவே தொடர்ந்து ஊன்றப்படும் மேற்சொன்ன அரசியலது தெரிவாகவே நமக்குள் கடந்த காலத்துள் இலக்கியச் சந்திப்போடு „சமாதானப் பட்டறை, அபிவிருத்திப்பட்டறை,தீர்வுத்திட்ட ஒன்றுகூடல்,சிந்தனையாளர்களது அவைக்கான கருவூலம் அமைத்தல் “ என்றும், இன்னபிற வடிவங்களிலும் மிக நேர்மையின்றிப் பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கிவிட முனைந்தோம்!

இதன் தொடரக இன்று ,எங்கு நோக்கினும் அந்நிய உளவு முகவர்களின் அணிவகுப்பே நமக்கு முன் நிகழ்கிறது.இது கொள்ளும் முகமூடிகளானது மேற்சொன்ன நிகழ்வுகளாக விரிகிறது.இலங்கையின் கட்சிகள்- இயக்கங்களின் எந்தப் பக்கத்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடிமறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.இலங்கைக்கு நகர்த்தப்பட்ட இலக்கியச் சந்திப்புக்காக க் கைக்கொள்ளப்பட்ட அரசியல் மிக மோசமான தெரிவு.இது,  பற்பல சந்தேகங்களுக்குட்பட்டுச் சிந்திக்கவேண்டிய அணிதிரட்சியாகும்.தனிநபர்கள் அணியுறும் தருணமானது எப்பவும் ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இருப்பதில்லை!அது, ஒடுக்கு முறையாளரது அரசியலது தெரிவாகவும் மாறியதும்-இயங்கியதும் நமக்கு ஏலவே பாடமாச்சு.

இந்த அரசியல்-சதிகளைப் புரிய நாம் வள்ளவரிடம் போவோம்.அதன் அநுபவத்தோடு இலங்கைக்குள் நகர்த்தப்படும் சாணாக்கியம் பிழைப்புவாதத் தமிழர்களை எப்படியெல்லாம் பிழைக்கத் தூண்டுகிறதெனப் பார்க்கலாம்.

„வில்லேருழர் பகை கொளினுங் கொள்ளற்க

சொல்லே ருழர் பகை.“ -குறள்:872, பக்கம்:347

வள்ளுவர் பேனா முனையை எதிர்க்காத அரசியல் சொல்ல,சாணாக்கியன் அதனையும் கடந்து மேலே செல்கிறான்.இவனது தந்தரமே மிகக் குள்ள நரித்தனமானதும்,நயவஞ்சகமானதும்கூட!

சாணாக்கியனின் உலகத்தில் ,தடுக்கி விழுபவர்கள்கூட ஒரு உளவாளியின்மீதே விழும் அளவுக்கு உளவுப்படைகள் அவசியமென்கிறான் சாணாக்கியன்.இன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே „இலக்கியச் சந்திப்பு“ச் செய்பவர்களாகவும்,“சிந்தனையாளர்களின்“ அவை அமைப்பவர்களாகவும் தமிழ் மக்களது துரோகிகள் தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.இவர்களே 40 வது இலக்கியச் சந்திப்பில் இலன்டனில் மிக நேர்த்தியாகக் கூடினார்கள் . கூடவே ,பலருக்குத் தலைவெட்டி ஒரு வினோதமான அரசியல் நடாத்தையைச் செய்தனர்.இதற்காகவே, பயிற்றுவிக்கப்பட்ட தலித்துவக் குழுக்களது தயவில் மேலும், விருத்தியான இந்த அரசக அரசியல் மெல்லத் தளத்தை மாற்றி இலக்கியச் சந்திப்பைக் கையகப்படுத்தியது.இதற்கு உடந்தையான இலங்கை -இந்திய உளவுக் கூலிகள் தொடர்ந்து பிளவுவாத அரசியலைகத் தமது  எதிர்ப்பாளருக்கு முன் நிறுத்திச்  சாதிய வாதத்தை ஆயுதமாக்கினர்.இது குறித்துத்தாம் சுசீந்திரன் தனது கட்டுரையில் கறாராகப் பேசியுள்ளார்.

இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும் துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.இது குறித்துப் பரவலாக விளங்க முற்படுவோம்.

கடந்தகாலத்தில் பிரான்சின் வரலாற்றியலாளர் Alexis de Tocqueville தனித்துவமான சுதந்திரத்துக்காக-விடுதலைக்காகப் போராடிய முன்னிலையாளர் என்பதை நாம் அறிவோம்.இத்தகைய தனித்துவமென்பது தமது இனத்துக்கானதாகவே இருக்கும் என்பதை Olivier Le Cour Grandmaison அல்ஜீரிய நடவடிக்கைகளில் பார்க்க முடியும், 1840 களில் அல்ஜீரியக் குடிகளை-குழந்தைகளைப் பெண்களை மிருகங்களிலும் கேவலமாக வருத்திய வரலாறை எவரும் இலகுவில் மறந்திட முடியாது.என்றபோதும்,கடந்த முள்ளி வாய்க்கால் யுத்தமானது  இந்திய-இலங்கை அரசுகளது கூட்டு வன்னிப் படுகொலையாக மாறியது!இதுவே ஒரு கட்டத்தில் தமிழினப் படுகொலை நெட்டூரமாக எழுந்தது.இதை எந்தவொரு வரலாற்றுத் துரோகத்தோடும் ஒப்பிட முடியாதவையாகவே நான் கருதுகிறேன்.

ஜனாதிபதி இராஜபக்ஷ தமிழ் மக்களை ஏமாற்றியபடி அவர்களைப் பூரணமாகக் கையலாகாதவர்களாக்கப் போடும் அரசியல் சுழிகளில் அகப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும், இனிமேற்காலத்தில் இலங்கையில் அடிப்படை உரிமைகளைபெறுவதற்கான எந்த அரசியற்பலத்தையும் பெற்றுவிடமுடியாதளவுக்கு இலங்கையின் இராணுவவாதம் இருக்கிறது.இதைக் கவனிக்காது நாம் புலிகளின் அழிவில் இலங்கைக்கு விமோசனமெனக் கருத்தாடமுடியாது.அது,மிகவும் கேவலமாக இலங்கையின் அரச தந்திரத்துக்குப் பலியாகிப்போவதாகவே இருக்கும்.ஆனால் ,இராகவன் குழு மற்றும் ,தலித்துவக் குழுக்கள் இராசபக்சே பின்னால் சனநாயகந் தேடியதும்-திரண்டதும் நாம் ஏலவே, பார்த்த கதைதாம்.இவர்களது அரசியல் இன்று ,மாற்றுக் கருத்துத் தளமான இலக்கியச் சந்திப்பை மெல்ல விழுங்கி ஏப்பமிட்டிருப்பினும் அதன் அரசியலைச் சரியாக மதிப்பிட்டே ஆகவேண்டும்.

தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்தில்,எவரெவாரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும் தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.இதுவரை,இலங்கை இனப் பிரச்சனையுள் நடைபெறும் அரச தந்திரங்கள்-இராணுவ வியூகங்கள் ,நெறிகள் யாவும் பாசிசப் போக்கினது வழிப்பட்டதாகும்.இதை மிக இலகுவாகச் செயற்படுத்தும் இந்தியா-அந்நிய அரசியலே நமது மக்களின் வாழ்வோடு மிகக் கேவலமாக யுத்தம் மற்றும் மனித விரோத அரசியலைக் கட்டி வளர்த்து வந்தது-இன்னும் தொடர்ந்து வருகிறது.

இதற்காக அமெரிக்காவும், மேற்குலகமும் ஒரு புறமும்,இந்தியாவும்,சீனாவும் மறு புறமாகக் காய் நகர்த்தி எமது தேசத்தை அந்நிய நலன்களின் வேட்டைக் காடாக்கியுள்ளது.இந்நிலையுள்,தமிழ் பேசும் மக்களது அடிப்படைப் பிரச்சனைகளைப் புலியழிப்பிலிருந்து விளங்க முற்படுபவர்கள் மீளவும் வரலாற்றில் உண்மைகளையும் புலிகளுக்கூடாகவே கற்பிக்க முனைகின்றனர்.புலித் தலைமையினது பாதையிலும் மீளவும் நடக்கக் கற்பிக்கின்றனர்.

காலனித்துவக் காலக்கட்டத்தில்-இலங்கையின் சமூக வளர்ச்சிக்காலக் கட்டத்தை மறுத்து, முரண்பாடுகளை மழுங்கடித்த காலனித்துவம்,இலங்கையில் தீடீர் முதலாளித்துவத்தைத் தோற்றுவித்து அதையே அரச முதலாளியமாக விட்டுவைத்துச் சென்றது.அதன் மீள் வருகையில் நவ காலனித்துவம் தொடர்ந்து இருப்புக்குள்ளாகியது. இதுவே,இப்போதும் இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் வளர்வுறும் சமூக வளர்ச்சிப்பாதையில் இனங்கள் உதிர்ந்து“இலங்கையர்கள்“எனும் கோசம் வலுப்பெறுவதற்கு முன்பே சமூக வளர்சியை மறுத்தபடி, அதன் இயல்பான வளர்ச்சிக்குக் குறுக்கே நின்றகொண்டும், திடீர்“இலங்கையர்கள்“எனும் தேசிய இன அடையாளத்தை, முழுமொத்த இலங்கை வாழ் இனக் குழுமத்துக்கும் பொருத்திவைத்துத் தமது நிதியாதாரத்தை இலங்கையில் பெருக்கும் பெரு முயற்சியில் மகிந்தாவினது குரலாக அனைவருக்குமான இலங்கை என்கிறது.இது, சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மிகச் சாதகமான குறுகிய இலாபங்களை வழங்கிக்கொள்வதால் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடித்து அவ்வினங்களைப் பெரும்பான்மைச் சிங்கள ஆதிக்கத்துள் உள்வாங்கி அழிப்பதற்கு மிக நேர்த்தியான சூழலை உருவாக்குகிறது.இங்குதாம் தலித்துவக் குழுக்களது அரசியல் சதியும்-பிழைப்புவாதமும் இலங்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.இது, ஒரு கட்டத்துள் நிலத்துள் நிலவும் „டக்ளசு “  வகைப்பட்ட புதிய குட்டி முதலாளிகளோடொரு சமரச அரசியல் சதிக்குட்பட்டு நிகழ்ச்சி நிரலை வகுத்துள்ளது.இதன் தொடர்  அகிம்சை, காந்தியமெனப் பின்னப்பட்டுச் சர்வோதயம்வரை மீளவொரு லொபித்தனமான அரசியலுக்கு நம்மைக் காட்டிப் போடுகிறது.இதன் மறுபக்கம் அராசகமே!

நான்,தலித்துவத் தேவதாசன் ,இராகவன் ,கீரன் போன்றவர்கள் முன் வைக்கும் „நாம் இலங்கையர்கள்“என்ற வாதத்தை மீளப் பேச முனைகிறேன்: இலங்கையைவிட்டுப் புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழும் இலங்கையர்களுக்குள் பற்பல கூறுகள்,பிளவுகள் இருக்கும்போது „இலங்கையர்கள்“எனும் பொது அடையாளம் அவசியமாக இருக்கிறதென்றால் பிறகெதற்குத்“தலித்துவ அடையாளம்“,பிரதேச அடையாளம்,மதஞ்சார்ந்த குழும அடையாளம்?

கலாச்சாரத் தேசியம் பேசுபவர்கள் எதற்காக“இலங்கையர்கள்“ எனும் அடையாளத்துக்குள் ஒரு இனத்தின் தனித்துவத்தையும்,உரிமையையும் மறைப்பது?

தமிழ்த் தேசிய இன அடையாளத்தை மறுபவர்கள் பின்பு தலித்துவ அடையாளத்தை எதற்காகத் தூக்கிப்பிடிப்பது?-மலையகத் தேசியத்தையும்,இஸ்லாமியத் தேசியத்தையும் பற்றிப் பேசுவது?

ஒடுக்குமுறைகள் யாவும் ஒடுக்குமுறைகளாகவே இருக்கும்போது அதில் ஒரு கூறை மறைத்துவிட்டு மறுகூறைத் தூக்கிப்பிடித்து எந்தவுரிமையையும் பெற்றுவிட முடியாது.இத்தகைய நடாத்தையானது சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றும் கயமைக்குப் பலியான அரசியல் வாழ்வாகும்.இதுவே, தலித்துவக் குழுக்களது தலைவிதி!

„ஈழப்போருக்கு“பின்னான இலங்கையில்,பெரும்பகுதி உழைக்கும் மக்கள்,இன அடையாளப்படுத்தப்பட்ட அரசியலில்,சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் பிளவுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழலில்,இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்றும்,“நாம் அனைவரும் இலங்கையர்களே“என்றும், மகிந்தாவிடும் குரலில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இலங்கையை முற்றுகையிடும் அந்நியப் பொருளாதார ஆர்வங்கள் இருக்கக் காணக்கடவது.இவை, இன்றைய ஆசிய மூலதனத்தோடான உறவில் பின்னிப்பிணைந்து இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது இலக்குக்கேற்பச் சொல்லுகின்றன.

உலக ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார மற்றும் புவிகோள அரசியல் ஆதாயங்களுக்காகப் பொது அமைப்புகள் எனும் வடிவில் „அரசுசாரா“அமைப்புகளை உருவாக்கி வைத்து அவற்றை இயக்குவதுபோன்று, இன்றைய இலங்கை புலிகள் அழிப்புக்குப் பின் இலங்கைத் தேசத்தில் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிக்க இத்தகைய „அரசுசாரா“அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கத் தக்கபடி உள்ளுர் அமைப்புகளைத் தோற்றுகிறது.இது மிகவும் ஆபத்தானவொரு மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அரசியல் வியூகத்தின் தொடர்ச்சியாக நம்முன் கொணரப்படுகிறது.

இங்கே,இலங்கை அரசானது தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தபட்ட இலக்குக்கமைய முன்நகர்த்துவதற்கு இத்தகைய அமைப்புளது ஒத்துழைப்புகளுடாகப் பொதுக் கருத்தை ஏற்படுத்தி, அதையே மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இவ்வமைப்புகளுடாகச் சொல்கிறது. இங்குதாம் 41வது இலக்கியச் சந்திப்பின் கதி ஒரு தெரிவுக்கான அரசியலை மையப்படுத்திச் செல்கிறது!

இன்று, புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்குச் சார்பான அரசியலை முன்தள்ளும்-முன்னெடுக்கும் இக் குழுக்கள், பல்வேறு வடிவங்களில் தமது முகமூடியைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.இதுள் தலித்துக்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி அல்லது கிழக்குக்குப் பிரதேச  மாநில உரிமை -முதலமைச்சர் அரசியலானாலுஞ்சரி -இல்லை -இதையுற்தாண்டி வன்னி மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி இவையாவும் இலங்கை அரசினது இன்றை இனவழிப்பு அரசியல் வியூகத்துக்கு வலுச் சேர்ப்பதற்கான கூறுகளாகவே இனம் காணத்தக்கன.இதன் புள்ளியிற்றாம் இலக்கியச் சந்திப்பு ,41வது சந்திப்பை இலங்கையில் நடாத்திவிடுவதற்கானவொரு  „தார்மீக“ நியாயத்தைத் தலித்துவ அரசியலைக்கொண்டு நிமிர்த்த முடியுமென இராகவன் குழுவும் நிரூபித்திருக்கிறது.

ப.வி.ஶ்ரீரங்கன்

யேர்மனி

17.04.2013

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: