போராடிச் செத்தவர்களை நினைவுகூரும் அறம்

„மக்களுக்காப் போராடிச் செத்தவர்களை“  நினைவுகூரும் அறம்-சில கருத்துக்கள்.

 

மாவீரர்கள் நினைவஞ்சலி : 2013

 

„தமிழீழப் போராட்டம்“  – தமிழீழத்துக்கான அரசியல் நியாயப்பாடுகளெல்லாஞ்சேர்ந்து இலங்கையில் மூன்று இலட்சம் தமிழ்பேசும் மக்களையும் அதன்சகோதர மற்ற இனத்தவர்களையும் கொன்று தள்ளியிருக்கிறது.முள்ளிவாய்க்கால்வரை இனப்படுகொலை அரசியலை மிக நுட்பமாக நடாத்திய இலங்கையை ஆண்ட-ஆளுங்கட்சிகள், இந்த அவலத்தைத் தோற்றுவித்த இலங்கை-அந்நிய அளும் வர்க்கத்தின் சேவகர்களாகவிருந்து இவ்வளவு மோசமான மக்கள்விரோத அரசியலுக்கும் சட்டரீதியான நியாயப்பாட்டை இலங்கையின் இறைமைக்குள் வைத்து நிகழ்த்தி முடித்தார்கள்.

 இந்த கோரத்தனமான அரசியல் போக்கின் தெரிவிலின்று 2013 இன் இறுதிக்கட்டத்திலும் நாம் செத்த-சாகடிக்கப்பட்ட போராளிகளுக்கு(மாவீரர்) நினைவஞ்சலி செலுத்துவதில் நன்றியறிதலைச் செய்வதிலேயே காலத்தைக் கடத்துகிறோம்.இதுவரையும் தமிழ் மக்களது தலைவிதியை தீர்மானிக்கும் பாத்திரத்தை வகித்தவர்கள் அவர்களது உயிர்-உடமைகளைத் தமக்காக அத்துமீறி அபகரித்தவர்கள்.இவர்களில் கணிசமானோர் இன்னும் உலகம் பூராகவும் பரந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றனர்.இவர்களிற் கணிசமானோர் ஆளும் மகிந்த அரசின் நிகழ்ச்சி நிரலுக்கும்,மேற்குலக அரசுகளது தேவைக்குமேற்பத் தொடர்ந்து நமது மக்களது வாழ்விலும்-இருப்பிலும் அத்துமீறி அதிகாரத்தைச் செய்பவர்களாகவே இருக்கின்றனர்.

 புலிகளது ஆயுதங்களும்,போராளிகளும் அழிக்கப்பட்டிருப்பினும் மேற்சொன்னவர்களிடம் ஆயுதமும்,அதிகாரமும் ஆளும் வர்க்கங்களது தயவின்வழியாகப் பரவலாகப்பட்டிருக்கிறது.அல்லது,இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடான தனியார் துணைப்படைகளாகவே இயக்கப்படுகிறது.இது,பெரும்பாலும் அமெரிக்கப்பாணியிலான இராணுவத் தந்திரோபாய நெறிக்குட்பட்ட சிறிய தேசங்களதும் அதன் ஆளும் வர்க்கத்தினும் வியூகமாகத் தற்போது இயங்க்கமுறுகிறது.இத்துணைப்படைகளது தலைவர்கள் பாராளுமன்றக் கட்சி அரசியலது சட்டரீதியான இருப்பில் பெயர்ப்பலகைக்கட்சியின் தலைவர்களாகவும்-பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பேரளவிலான அமைச்சகர்ளாகவும்இலங்கையின் போர்க்கால அரசியல்வரலாற்றில் இருந்தே வந்துள்ளார்கள்.இவர்களது இருப்பு முள்ளி வாய்க்காலுக்குப்பின் இன்னமும் இல்லாதாக்கப்படவில்லை!இதன் அர்த்தம் பேரளவிலான ஜனநாயகத்தன்மை இன்னமும் கானல் நீராகவே இத்தேசங்களில் இருக்கிறது.

 தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.இந்த „யார்-யாரோ“வுக்குள் மேற்சொன்ன அரசியல்-அதிகாரத்துவ முடிச்சுக்களே மிகவும் பலமானவொரு அரசியல் வெளியைத் தகவமைத்துவைத்து தமிழ்பேசும் மக்களதும் மற்றும் பிற சிறுபான்மைச் சமூகங்களதும் சமூக அசைவியக்கத்துள் தாக்கத்தைச் செய்கின்றனர்.இவர்கள் சமூகவளர்ச்சியின் குறுக்கே நின்று மக்களது அனைத்து ஆற்றல்களையும் சிதறடித்து அவர்களை ஆத்மீக ரீதியகப் பலவீனப்படுத்தி வருகின்றனர்.மக்களை அதிகார வர்க்கங்களுக்காகவும்,அவர்களது கட்சிகளது-தலைவர்களது நலன்களுக்காகப் போராடவும்-கலகஞ் செய்யவும் தூண்டி, மக்களது நலனை மெல்ல இல்லாதாக்கிக்கொண்டுள்ளார்கள்.

 மக்கள் தமது நலனுக்கான-விடுதலைக்கான அனைத்து அரசியல் பார்வை-போராட்டவுணர்களிலிருந்து ஓரங்கட்டப்பட்டு கட்சிகளதும்-அதிகாரமுடையவர்களதும் நலனுக்கான தொங்கு சதைக் கூட்டமாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்-உதிரி வர்க்கமாக்கப்பட்டுவருகிறார்கள்.இதைக் கணிப்பிலெடுக்காதவர்கள் 2013 இலும்“போராடிச் செத்தவர்கள்-போராளிகளுக்கு“நினைவஞ்சலி செலுத்தவதை மட்டும் தார்மீகக் கடமையாக உணர வைக்கப்பட்ட அரசியலின் தெரிவில், ஒருவித குற்றுவுணர்வுக்குள் மனமுடக்கமுடையவர்களாகவும் இத்தகைய நினைவஞ்சலியின்மூலம் தமது குற்றத்தைப் போக்கமுடியுமெனவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

 “ நாம் கடந்தகாலத் தவறுகளை நுணுக்கமாக ஆய்ந்து நினைவுப்படுத்தவில்லையானால் அதுவே மாபெரும் பேரிடி.இதுவே,மீளவும், விட்ட தவறுகளைத் தொடர்ந்துஞ் செய்யத் தூண்டுகிறது. „

 முள்ளி வாய்க்கால்வரையான „தமிழீழத்துக்கான“ ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து, தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.இந்தக்காட்டிக் கொடுத்தலின் பிதாமக்களான  மேல் நிலைத் தலைவர்களே இன்று இன்னொரு வடிவிலான அகிம்சா வாதிகளாகவும் மக்களைத் தமது எஜமானர்களுக்கேற்ப மனோவியல்ரீதியாகப் பலவீனப்படுத்தி அரசியல் செய்பவர்களாகவும், வலம் வருகின்றனர் .

 இவர்களது பின்னே இயக்குமுறும் „மக்களுக்காக“  உதவும் அமைப்புகள்,நிறுவனங்கள் யாவும் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட செல்வத்தை வைத்தே அவர்களை மேலும் கையாலாகாத கூட்டமாக்கும் வியூகத்தோடு, இலங்கையிலும்-புலம்பெயர் தளத்திலும் ஒருவிதமான „தேசியக் கோரிக்கைகள்-போராட்டங்கள்“செய்கின்றன.இது,  காலாகாலமாக „மாவீரர் தினம்“ செய்யவும், அதன்வழி பெரும் பகுதியான இளைஞர்களைத் தமது பக்கம் தொடர்திழுக்கவும் செய்யப்படும் கண்கட்டி வித்தைகளைப் புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசங்களில் தொடர்ந்து காணத்தக்கதாவிருக்கிறது.

 இது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது-செல்ல வைக்கிறது!

 இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு „உரிமை“குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.இந்தக் கொலைகளுக்கான மூலகாரணமான இலங்கைப் பயங்கரவாத அரசைக் கேள்விக்குட்படுத்தாத முறையில் அவர்களோடிணைந்தியங்கும் இவர்கள், மக்களைத் தொடர்ந்து குறுக்குவழியிலான முறைமைகளில் சிந்திக்க வைக்க முனைகின்றனர்.

 இதிலிருந்து மீளும் சிந்தனையானது தொடர்ந்தும்“புரட்சி-சோசலிசம்-மார்க்சிசம்“ என்ற போர்iவியின்அல்லது முலாத்தின் மூலம் புறந்தள்ளப்பட்டு,அது சமுதாயத்துக்கு ஒவ்வாத சிந்தனையாகத் தொடர்ந்து பரப்புரை செய்யப்பட்டும், இந்தத் தருணம்வரை மக்களிடம் தமது நலனுக்கான சிந்தனை உளவியல்ரீதியாக வெறுக்கத்தக்கவொரு எண்ணமாக மாற்றப்பட்டுவிட்டது.

 இந்த வெற்றியிற்றாம் மேற்கூறப்பட்ட அதிகார வட்டம் தமது ஏகபோகமான அரசியலைத் தொடர்ந்து செய்கிறது-மக்களை அதிகார வர்க்கத்துக்கிசைவாக இயங்க வைக்கிறது.ஆதிக்கச் சக்திகளின் முன்னே பலவீனமானவொரு கூட்டமாகவும்,அவர்களது காலில் வீழ்ந்தும்-நம்பியும் கண்ணீர் சொரிந்தும் சோற்றுக்கு அலையுமொரு மக்கள் கூட்டமாக ஆக்கப்பட்டு விட்டனர் மக்கள்!

 மேலுமிந்த நிகழ்சிப் போக்கு, நடத்தர வர்க்கப் படிப்பாளிகள்,தொழில்முறைரீதியாகத்  தேர்ந்த துறைசார் உழைப்பாளிகளிடமும்  தமிழ் பேசும் மக்களது முற்போக்கு நகர்வை முடக்குவதற்கானதான வாதங்களில் கருத்துக்களைத் தகவமைத்துக் கொள்கிறது. இதுவரையான எல்லாவிதப் மக்கள் விரோதப்போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்ட வியூகமானது, இறுதியில் சரணடைந்த போராளிகளைக் கொன்று தள்ளிய இலங்கைப் பாசிச அரசின்  ஈனத்தனத்தை,இவர்கள் „தியாகமாக்குவதில்“ மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.

 மக்களோ எல்லாவற்றையும் விசாரிக்க முனையும்போது, மீளவும், அதே வித்iதாகளோடு புலம்பெயர் ஊடகங்கள் உருவேற்ற முனையாவிடினும்,ஒப்பாரிவைத்துக்கொண்டபடி தம்மீது பச்சோதாபங்கொள்ளும் ஒரு இனத்தின் ஒப்புதலைக் குறிவைப்பது,இலங்கை அரசின் ஆளுங்கட்சிகள் மற்றும் இந்திய நலன்களுக்கான பாதுகாப்பு அரணாகவே மக்களைத் தொடர்ந்து இயக்க முனைகின்றனர்.இதற்கேற்பவே நடத்தர வர்க்கப் „படிப்பானிகளை“ மெல்லத் தகவமைத்தும் கொண்டுள்ளர்.

 அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதை மேற் சொன்ன „தேசிய அரசியலும்“ ,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.

 இலங்கை அரச வரலாற்றில் முள்ளிவாய்க்காலில்  தமிழர்களை வெற்றிகொண்ட சிங்கள இராணுவ மாயை சிங்கள மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கான எஜமான நிலைக்கு உயர்த்தியுள்ளது. இது,இனவாத அரசியலில் பின் தொடரும் பொருளாதார இலக்குகளோடு முற்றிலும் தொடர்புடையதாக மாறியுள்ள நிலையிலும் சிங்கள எஜமான உளவியலானது எந்தவிதப் பண்பு மாற்றத்தையும்கொள்வதற்குச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இலக்குகள் இடங்கொடுக்கவில்லை. அது,தொடர்ந்து இன மேலாதிக்கத்தைக் கடைப்பிடித்தபடியேதாம் ஆசிய மூலதனத்தோடான தனது உடன்பாடுகளைக் கொண்டியங்குகிறது.

 தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலை கீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.இப்படித்தாம் அதிகார வெறிகொண்ட பாசிச    ஜெயலலிதா கூடச் சமீபத்தில் நமக்கு „ஈழத் தாய்“ ஆனார். இது, அரசியல் விய+கமல்ல.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.

 அதிகாரம்-பணப்பலம்,பதவிக்காகத் தமிழ்த் „தலைவர்கள்“  தத்தமது குறுகிய நலன்களுக்காக முழுமொத்த மக்களினதும் நீண்டகால நலன்களை இழப்பது மிகக் கேவலமான சிந்தனையற்ற சிறுபிள்ளைத்தனமானதாகும்.இது தமிழ்பேசும் மக்களைச் சிங்கள இனவாதப் பயரவாத ஆளும் வர்க்கத்தோடிணைத்து ஒப்பீடு செய்து தமிழர்களே அதிகமானவொடுக்குமுறையாளர்களெனவும் வகுப்பெடுக்கிறது.முன்னாள் வடக்குக் கிழக்கு முதல்வர் வரதாராஜப் பெருமாள் அவர்கள் இதையொரு அரசியலாகவே தொடர்ந்து முன்னெடுக்க, அவர்களது அடிப்பொடிகள் இத்தியாவைப் பகைக்காத அரசியலும் பேசிக்கொண்டே இதைக் கடை விரிக்கின்றனர்.தமிழ் மக்கள் இன்னமும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்பதில் பல தேர்தல்கள் வந்து விலகுகின்றன.இதுதாம் இன்றைய நமது அரசியல்  யாதார்த்தம்.

 இத்தகையவொரு அரசியல் போக்கில் போராடிச் செத்தவர்களும்-சரணடைந்து சிங்களப் பயங்கரவாதிகளால் கொல்ப்பட்ட மக்கள்-போராளிகளுக்காவும் நினைவஞ்சலி செலுத்தும் இந்த 2013, 47-48 வாரத்தில் நாம் தியாகத்தை மதிப்பது மட்டுமல்ல அதைச் சிதறடித்த இன்றைய நமக்குள் இருக்கும் புரையோடிப்போன அரசியலையும்,அதிகாரத்துக்கான நோக்கில் இயக்குமுறும் அதிக்கச் சக்திகள்,அவர்களது நிதியாதிக்கம்வரைத் தெளிவாகப் புரிந்துகொள்வதே தியாகத்தை மதித்துக்கொள்ளவும், அதை நினைவுப்படுத்தவுமான தார்மீகவுணர்வை நமக்களிக்கும்.

 இதுவல்லாத அனைத்தும், வெறும் சம்பிரதாயச் சடங்கு  நகர்வே. இஃது,ஒடுக்குமுறையாளர்களை எந்தக் கேள்வியுமற்று அங்கீகரப்பதில் போய் முடியும்.

 நாம் நிறையச் சிந்திக்க வேண்டும் எதிர்கால அரசியல் உரிமை-வாழ்வு குறித்து!

 ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி,

 24.11.2013.

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: