கவிஞர் ஜெயபாலனுக்கு இலங்கையில் வைத்துச் சொல்லப்படும் சேதி!

முள்ளிவாய்க்கால்வரை புலி அழிப்புக்காக பல பத்தாயிரம் மக்களைப் பலி கொண்ட இந்திய நலனாது,உலக-பிராந்திய நலன்களோடிணைந்து உருவாக்கும் கட்சிகள்,குழுக்கள் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை மிக நேர்த்தியாகப் பிளவுபடுத்துவதில் குறியாக இருக்கிறது.இதன் உச்சக்கட்டம் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஓராயிரம் குழறுபடிகளை இன்னபிற நடிவடிக்கைகள் ஊடாகச் செய்துவருவதை நாம் சமீபகாலமாக இனங்காணலாம்.

எங்கு நோக்கினும் அந்நிய உளவு முகவர்களின் அணிவகுப்பே நமக்கு முன் நிகழ்கிறது.

இலங்கையின் கட்சிகள்- இயக்கங்களின் எந்தப் பக்கத்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடி மறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.

நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழி பறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது.சமீபத்தில் இலங்கை சென்ற கவிஞர் ஜெயபாலனுக்கு நடந்தவை குறித்துப்பலரும், பத்துஞ் சொல்வதில் இலங்கை அரசின் ஜனநாயகவிரோதச் செயற்பாடுகளை நியாயமாக்கமுனைகின்றனர். அரசுவென்பது தனிப்பட்ட வாழ்வில் தலையிடும் பாரிய ஒடுக்குமுறைப் பொறியமைவைக் கொண்டிருப்பதென்பதைத் திட்டமிட்டு மறைப்பதில் அரச லொபிகள் கவனமாக அது சார்ந்தியங்குகின்றனர்.தேனியில் ஜெய பாலன் குறித்த கட்டுரை இந் நோக்கிலேதாம் புரியவேண்டிய வுண்மையை எடுத்துரைக்கிறது.இத்தகைய கட்டுரையின்வழி தனிப்பட்ட கைதுகள் யாவும், அரசியலுக்கு அப்பால் சுய விளம்பரந்தேடலெனும் போக்கில் வைத்துணரப்படவேண்டுமா?

இதுவரை இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைத்திருக்கப்படும் அப்பாவிகளின் அடிப்படை மனிதவுரிமையையே காலிற் போட்டு மிதிக்கும் எண்ணங்களை இலங்கை அரசுக்கேற்ப எழுதிக் குவிக்கும் அரச லொபிகளது காலத்தில் இஃது, தமிழ்பேசும் மக்களது அன்றாட வாழ்வாகப் போய்விட்ட இலங்கை அரசின் அத்துமீறிய கைதுகள்-கடத்தல்கள் யாவும் ஏதோவொரு விதத்தில் அவசியமானதாகக் குறித்துரைக்கப்படுவதை எங்ஙனம் புரிவதென்பதில் உணர்வு மரத்துப் போகிறது.

எனவே,இன்றைய சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.

„வில்லேருழர் பகை கொளினுங் கொள்ளற்க

சொல்லே ருழர் பகை.“ -குறள்:872, பக்கம்:347

வள்ளுவர் பேனா முனையை எதிர்க்காத அரசியல் சொல்ல,சாணாக்கியன் அதனையும் கடந்து மேலே செல்கிறான்.இவனது தந்தரமே மிகக் குள்ள நரித்தனமானதும்,நயவஞ்சகமானதும்கூட!

சாணாக்கியனின் உலகத்தில் தடுக்கி விழுபவர்கள்கூட ஒரு உளவாளியின்மீதே விழும் அளவுக்கு உளவுப்படைகள் அவசியமென்கிறான் சாணாக்கியன்.

இன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே „இலக்கியச் சந்திப்பு“ச் செய்பவர்களாகவும்,“ வெள்ளை வேன் படங் காட்டுபவர்களாகவும்“ தமிழ் மக்களது துரோகிகள் தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.

இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும், துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.கவிஞர் ஜெயபாலனின் கைதிலிருந்து பல கூறுகளாக விவாதிக்கும் புலம்பெயர்“மாற்றுச்“சிந்தனையாளர்கள்-மண்ணாங்கட்டிகள் யாவரும் தத்தமது வசதிக்கேற்பவே அரசியல் பேசுகின்றனர்.கைது செய்யப்பட்டவனது மனிதவுரிமை-அடிப்படையுரிமை குறித்துப் பேசுவதில் கிஞ்சித்தும் எண்ணிக்கொள்ளாத மனித மனங்கள் எம்மை அச்சப்படுத்துகின்றன!

மனிதவுரிமைசார்ந்தும்-அடிப்படை உரிமைகள் குறித்தும்பேசுவதைத் திட்டமிட்டுத் தவிர்த்து அன்றியஃதை, வேடிக்கையான கதையாடலாக்கியும் விடுகிறார்கள்.

இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.தத்தமது இருப்புக்கு நிகரானவொரு விசும்பு நிலைகள் உருவாகுவதையெவரும் பொறுத்துக்கொள்ள முடியாது தலைவெட்டும் அரசியலாகக் காட்டிக் கொடுப்புகள்-குழிபறிப்புகள் தொடர்ந்தியங்குகிறது.தமிழ் மக்களது அரசியலே இந்தக் கதியாய்மாற்றப்பட்டபின் பல ஜெயபாலன்களைக் குறித்துக் கைகாட்டப்படும் சூழலைத் தொடர்ந்தியக்குபவர்கள் புலம்பெயர் தளத்தில் பல்வேறு முகங்களோடு அரசியல் பேசுபவர்களாகவே இருக்கின்றனர்.அவர்கள், நமக்குள் முகத்தைப் புதைத்து வைத்தபடி இலங்கை ஒடுக்குமுறை அரசில் அங்கம் வகிக்கின்றார்கள்!

இன்றைய இலங்கை அரசியலில் தமிழ்பேசும் சமுதாயத்தினது தலைவிதியானது கயமைமிக அரசியலுக்குள் சிக்குண்டுள்ளது.இதை இந்திய-இலங்கை அரசியல் நலன்களுக்குள் கட்டுண்டுபோன தமிழ்க்கட்சிகள்-முன்னாள் ஆயுதக்குழுக்களெனச் செவ்வனவேயான திட்டத்துக்குட்பட்ட அடக்குமுறை அரசியலுக்கேற்ற நடாத்தையால் நமக்கு நிரூபித்து வருகிறார்கள்.இங்கே அழிந்துபோன புலிகளது சர்வதேசச் சீமான்களும் அதே பாதையில் நடைபயில இந்தியாவினது இலக்கு மிக விரைவாக எட்டப்பட்டு வருகிறது.

எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.ஒரு சாதாரண மனிதனது வாழ்வு,சுக-துக்கம் அவனது-அவளது அகவிருப்புகள் மனிதவுரிமைசார்ந்த அடிப்படையுரிமைக்குட்பட்ட அரசியல் வாழ்வு வரை அனைத்தும் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டு மனித இருத்தலே சாத்தியமற்றவொன்றாய் இலங்கை அரசியல்வாழ்வு நமக்குச் சிறை-கைது-கடத்தல் என்ற பற்பல ஒடுக்குமுறைசார்ந்த வன்முறையாக மேலெழுகிறது.ஜெயபாலனது கைதிலிருந்து இஃது காட்டமாகவுணரத்தக்கது – ஆட்காட்டல்-கை காட்டலது அரசியலின் கொடுமை எப்படியென்பதைப் புரியக் காலத்தில் வாழ்ந்தாக வேண்டும்!.

சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும் திட்டமிட்டுச் செயலாற்றும் அரசியல் பண்பானது புலத்திலுள்ள அரச எதிர்ப்பாளரைக் குறித்துக் கை காட்டுவதில் ஒரு வியூகமானவொரு நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டே செயற்படுவதை மிக நுணுக்கமாக அறியவேண்டும்.

 

இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இவர்கள்தாம்  „வெள்ளை வேன் படத்தை“க் குறித்துப் பரப்புரைகளும்,ஒத்துழைப்புகளும் நல்கி இத்தகைய தந்திரோபாயத்தை மக்களது விடிவுக்கானதென்று விதந்துரைத்தும் வருகின்றனர்.அரசுக்குக் கை காட்டுபவர்களே கவிஞர் ஜெயபாலனின் கைதை எதிர்த்துக் குரல் கொடுப்பதாகவும் வேடம் புனைகின்றனர்.நமக்குள் எதிரிகள் பல வடிவினில் உருவாகியுள்ளனர்.இவர்களை நமக்குள் இனம் காண நமது பழைய நண்பர்கள் எனும் பாசம் விட்டுவிடுவதில்லை!

இது, அடக்குமுறையாளர்களோடு, ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,எதிர்ப்பரசியலெனும்பெயரில் தொடர்கிறது.நியாயத்துக்காகக் குரல் கொடுப்பதாகவும் கண்கட்டி வித்தைகட்டுகிறது.இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே „தீர்மானங்களும்“-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப் படுகின்றனர். இத்தகைய பண்பினது விருத்தியே அரசவொடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பரசியலைப் பிளந்து குறுகிய இழிநிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.இங்கே,கவிஞர் ஜெயபாலனைக் காலை வாரிவிட்டவொரு குழு மிக வேகமாகவே அரசவொடுக்குமுறையை வெறும் நகைச்சுவையாக்கி ஒனறுமில்லாதவொரு கருத்தாகக் குறுக்குகிறது.அதாவது,பாசிசத்தின் உச்சக்கட்டத்துக்கான முகிழ்ப்புக்களை ஒன்றுமில்லாதவொரு கற்பனையாகக் காட்டுகிறது.

பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும் இருக்கட்டும்.ஆனால்,முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான அரசியலது இருப்பே ஒரு சில எதிர்ப்புக் குரல்களதும், மக்கள் சார்ந்த கருத்துக்களிலும் அதுசார்ந்த சில அமுக்க நிகழ்வூக்கத்திலுமே தங்கியுள்ளது.இத்தகையவொரு சூழலில் ஜெயபாலனைக் குறித்து அபாண்டமான கருத்துக்கள் புனைவதென்பதுகூட  தனிப்பட்ட அரசியலை மையப்படுத்தியதென் பதாகவிருக்கு மென்றும் எண்ணத் தோன்றுமா?

நடந்து முடிந்த யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்புக்குள் மையமுற்ற பல்வேறு குழுக்கள்-அமைப்புகள்,தமிழ்நாடு-இந்தியாவரை மையங்கொண்ட சக்திகள் யாவும்  தத்தமது எஜமானர்களைக் காக்கும் கூட்டம் என்பது உலகறித்தவுண்மை! இன்னொரு வகையில்,தமக்கானவொரு கருத்துக் களத்தை  நிறுவுவதில் தமது அதிகாரங்களைக்காத்துக்கொள்வதற்கும் அதன் இரூபத்தில் அந்நிய எஜமானர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தமது நலன்களைக் காக்கவும்வெள்ளை வேன் படங்காட்டி ஒரு வியூகத்தை மெல்ல விரித்துள்ளனர்.

இதன் வாயிலாக அதிகாரமையங்களைத் தமது அரசியல் நட்பு சக்திகளாக்கி இலங்கை மக்களின் முதுகில் குத்தி வேட்டையாட இந்தக் கைக்கூலிக்கூட்டம் பற்பல வடிவங்களில் நம்முன் வருவதென்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

இத்தகைய மக்கள்விரோதிகளுக்கு அந்நியத் தேசங்களது உளவு நிறுவனங்களே நிதியீடும் செய்து இவர்களைத் தமது நம்பகமான கையாளகவும் பயன்படுத்தித் தமிழ்பேசும் மக்களை மிக நுணுக்கமாகக் கண்காணிக்க முனைகிறது.இதன் தொடராக நமக்குள் கொட்டப்படும் கருத்துகள்,நமது மக்களது விடிவுக்கானதாகவும் பரப்புரை செய்யப்படுகிறது!

இத்தத் தருணத்தைக் குறித்துக் கிஞ்சித்தும் சிந்தனை செய்ய மறுத்திருந்த கவிஞர் ஜெயபாலனுக்கு இலங்கையில் வைத்துச் சொல்லப்படும் சேதி என்னவென்பதை, அவர், உணர்வுபூர்வமாக உள்வாங்கிச் சொல்லப்படும் காலத்தில் இனம் காணத்தக்கவொரு புலம் பெயர் விசமிகளது குழுமம் மேலும் நமக்குள் புலப்படுத்தப்படும் அரசியல் இத்தகையவொரு நெருக்கடியை மேலும் புரிந்துகொள்ளப் பேருதவியாகவிருக்கும்.

என்றபோதும்,இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட கவிஞர் ஜெய பாலனுக்கு மட்டுமல்ல இலங்கை இனவாத அரசால் பல்லாண்டுகளாகச் சந்தேகத்தின் பெயரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும்-அப்பாவிகளும் விடுதலை செய்யப்படும்வரை நாம் அவர்களுக்காகக் குரல் கொடுப்பது மனித இருத்தலுக்கான தோழமைக் குரலே.

ப.வி.ஸ்ரீரங்கன்

26.11.2013

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: