10 இலட்சம் மலையக மக்களை நாடற்றவர்களாக்கியதற்காக…

“வடக்கும்,கிழக்கும் “பிரிவதற்குப் புலிகளே காரணம்!

பிள்ளையானுடன் ஞானம்

42 வது இலக்கியச் சந்திப்பு : பிள்ளையான்-கருணா கம்பனியின் பிரச்சாரகப் பீரங்கி ஞானம் தரும் மாகாணசபை குறித்த விளக்கந்தாம் என்ன-ஏன்?

இலங்கை-இந்திய அரச லொபிகாளாலும் ,மேற்குலக என்.ஜீ.ஓ.களது[Non-governmental organization ] தயவில் உயிர்வாழும் தமிழ் விசமிகளாலும் நடாத்தப்பட்ட பேர்ளின் 42 வது இலக்கியச் சந்திப்பு முற்றுமுழுதும் இந்த விசமிகளாலேதாம் நிறைக்கப்பட்டது.இதை ஏலவே புரிந்துகொண்ட பலர் இதைத் தவிர்த்துக்கொண்டனர்.இந்த இலக்கியச் சந்திப்பானது அதை உருவாக்கியவர்களால் நிராகரிப்பட்டு, இறுதியாவிருந்த ஒரு சிலரும் அதைவிட்டு ஒதுங்கும் அரசியலாக இந்த இந்திய-இலங்கை லொபிகளது கை மேலோங்கி வருகிறது.

இன்று,இந்த இலக்கியச் சந்திப்பு முன்னெடுப்பும்;நகர்வும் ஒருவரையொருவர் கேவலமாகப் பழிவாங்கும் அரசியலாக மாறியுள்ளது. புலத்தில் எல்லோருக்கும் தத்தமது அரசியல் நலன் சார்ந்தும்-பொருள் சார்ந்தும்;இருப்புச் சார்ந்தும் ஏதோவொரு குழுக்கட்டல் தேவையாகி,ஒவ்வொருவரும் சிறு சிறு தீவுகளாக இருந்துகொண்டே குழுவோடு ஐக்கியமாகியுள்ளார்கள். இவர்களிடம் ஒருவரையொருவர் தலைவெட்டல் நோய் அதிகரித்துள்ளதற்கான ஆதாரமாக,பேர்ளின் “42வது இலக்கியச் சந்திப்பு” க்குச் சொந்தங்கொண்டாடும் ஜீவமுரளி, நிர்மலா,இராகவன்,ஞானம்,தேவதாசன், போன்றோரது நயவஞ்சக வலைவிரிப்பு நல்லவுதாரணமாகிறது.குழுக்கட்டல் எந்த வகையிலும் பாரிய மாற்றத்தைத் தரப்போவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் இத்தகைய தலித்துவ வேடாதாரிகள்-நபர்கள்-குழுக்கள் எப்போது ‘நல்ல’ மனிதர்களாக,முற்போக்காளர்களாக மாறினார்கள்?

இப்போதைய அவர்தம் முன்னெடுப்புகளின் அவர்தம் அரசியல் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.இவர்கள் செய்த காரியத்தால் ஞானம்போன்ற பணத்துக்கு அலையும் வேடதாரிகள் ,கொலைக்காரன் கருணாவோடிணைந்தும்,பிள்ளையானுக்கு ஆலோசகராக மாறியும் தமிழர்களது பாரம்பரிய பூமியை அந்நிய நலன்கள் துண்டாடுவதற்கிசைவாகக் கருத்தியற் பரப்புரையைச் செய்து பிரதேசவாதத்தைக் கிளறி மக்களைக் கூறு போட்டுக்காட்டிக் கொடுத்தார்கள்.இதன் தொடராக மாகாண சபைகள் குறித்தும் அதன் இருப்பு-வளர்வு குறித்தும் வகுப்பெடுப்பதில் ” 42 வது இலக்கியச் சந்திப்பு”, இந்திய லொபிகளது அரங்காக மாறிக்கொண்டது.இந்த, இலக்கியச் சந்திப்புக் குறித்துப் பேசுவதைவிட மாகாணசபை எனும் இந்திய நலனுக்குட்பட்ட சிங்களப் பேரினவாதத்தின் ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் அதன் போக்கை ஏன் ஞானம் போன்றோர் நியாயப்படுத்துகின்றனரெனப் பார்ப்பதுதாம் அவசியமானது.

வடக்குக் கிழக்கு மாகாணங்களும் அதன் வளர்ச்சிக்கும்,செயற்றிறனுக்கும் ,முன்னேற்றத்துக்குமென வகுப்பெடுக்கப்படும் கருத்துக்கள் இலங்கை இனங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டைக்குறித்து ஒரு மொன்னைத் தனமாக விளக்க முற்படுகிறது.

இலங்கைப் பேரினவாத அரசியலது கையாலாகாத்தனம் இலங்கைச் சிறுபான்மை இனங்களை மொட்டையடித்த வரலாறு இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி-மற்றும், பொருளாதார நலன்சார்ந்த முரண்மிக்க அரசியல் உரிமைவழி கட்டப்பட்டதெனினும் இனத்துவ அடையாள அரசியலானது அன்றைய காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் முழுமொத்த மக்களையும் காலனித்துவத்தின் பின் விளைவுகள் குறித்துச் சிந்திக்காதிருப்பதற்காகக் கட்டப்பட்டது.இதைச் செய்த பிரித்தானியக் காலனித்துவாதிகள் நமக்குள் இன்றும் தமது சிந்தனைவழி நம்மை கூறுபோடுவதில் நவ காலனித்துவத் தொடராக வெளிப்படுகின்றனர்.ஆனால், அவர்களது முகங்கள் நமது முகத்தோடு மேலெழுவதைக் குறித்துப் பேசியாக வேண்டும்.சந்தர்ப்பம் வரும்போது இது குறித்து விரிவாகப் பேசப்படவேண்டும்.ஏனெனில், ‘வடக்கு ஆதிக்கம்-யாழ்பாணியம்’ எனும் உளவியற் கருத்தாக்களது அரசியலானது அன்றைய காலனித்துவத்தின் வார்ப்புக்குள் உருவாக்கப்பட்ட அரசியலென்பதைக் குறித்து நீண்டவுரையாடலைச் செழுமையான மொழிவழியாகக் குறித்தாக வேண்டும்.

ஸ்ரீமா-சாஸ்த்திரி

பண்டா-செல்வா, டட்லி-செல்வா, ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தங்களுக்குள் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தமே.இதுதாம் “தமிழர்களது உரிமையைத் தமிழர்களை வைத்தே துவசம் செய்ததன் முன்னோடி” ஒப்பந்தம்.

இத்தகைய ஒப்பந்தங்கள் குறித்துப்பேசும் ஞானம் அரசியல் அநாதையாக இந்தியப் பிராந்திய நலனை எமக்குள் திணிப்பதில் கருத்தற்றவொரு கோழைத்தன அரசியலைப் பேசுகிறார்.

ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் என்பதைப் புரிந்துகொள்ள முனையும் ஒரு அரசியல் மாணவனுக்கு இந்தப் பிரச்சனையின்(மலையக மக்களுக்கான குடியுரிமை நீக்கம்)முக்கிய கூறு பார்ப்பனியம் போற்றும் இந்தியத் தேசத்தினது சதியென்பதையும்,அதற்கான காரணம் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தனது கைகளுக்குள் வைத்திருந்து தமிழரை கருவறுக்கவுமான பிராந்தியப் புவிகோளரசியலின் பிரதிபலிப்பு-அபிலாசை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இலங்கையின் இடதுசாரிகளின் [குறிப்பாக JVP ]வரலாற்றில், அவர்கள் செய்த மாபெரும் துரோகம் மலையமக்களை ‘இந்தியாவின் விஸ்தரிப்புக்கு உழைக்கும் கைக் கூலிகள்’என்று காட்டிக் கொடுத்தது.

அன்றைக்கே மார்க்சியப் பார்வையற்ற இந்த இடதுசாரிகள் சிங்களப் பூர்ஷ்சுவாக்களின் கைகளைப் பலப்படுத்தியதன் விளைவு இன்றைக்கும் சிங்களப் பாசிசத்தைக் காப்பதற்குத் துணைபோனபடி.1949இல் கொண்டுவரப்பட்ட பிராஜவுரிமைச்சட்டம் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் முழு நிறைவுகண்டது.

இவ்வொப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்கு நடந்தேறிய அரசியல் கூட்டுக்கள்,டட்லி-செல்வா ஒப்பந்தங்கள்,கூட்டரசாங்கத்தில் பங்குகொண்ட தமிழ் அரசியல் வாதிகளின் பதவி ஆசைகள்,அவர்களுக்கு இந்தியா ஆசைகாட்டிய முறைமைகள் யாவுந்தாம் காரணமாகிறது.இதையெல்லாம் மறைத்தபடி எவனொருவனால் மாகாணசபை குறித்து விவாதிக்க முடியும்?அதன் தோல்விக்குப் புலிகள்மட்டுமே காரணமென்றும், மாகாணசபைகளது அபிவிருத்திக்கும் அதன் வாயிலாக இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துள் பங்குறுவதாலும் தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றும், இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் அதன் தெரிவில்-பங்கு பெறுதலில் உரிமைகள் பெறும் வாய்பு அதிகமெனவும் எந்தவொரு மூடனாலும் ஞானம்போல் விவரிக்க முடியாது.

இதிலிருந்த நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்தவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது.இத்தைகய வலையில் பொருட் குவிப்புக்காக ஞானம் போன்ற இளைஞர்கள் பலியாகியதுதாம் நம் காலத்துத் துர்ப்பாக்கிய நிலை!இதுதாம் இந்தியப் பார்ப்பனியத்தின் வெற்றி.அதன்ஆதிக்கமானது இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தோடு பின்னப்பட்டது.இதை இந்தியா திணித்த மாகாணசபை மற்றும் அதன் அடித்தளமான ஒப்பந்தங்கள் வரை நாம் அறிய முடியும்.

பொன்னம்பலம்,செல்வநாயகம்,திருச்செல்வம்

1949 இல் கொணரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம் 10 இலட்சம் மலையக மக்களை நாடற்றவர்களாக்கியதற்காகவும், பொன்னம்பலம் அதை ஆதரித்தார் என்பதற்காவும் அன்று அக்கட்சியைவிட்டு வெளியேறிய செல்வா, தமிழரசுக்கட்சியை அவரது சகாக்களுடன் அமைத்தபோது உண்மையில் அக்கட்சி மாபெரும் இயக்கமாக மாறியது.ஆனால், அக்கட்சி 1965 ஆம் அண்டில் ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்ததே அங்கேதாம் தவறும்,அரசியல் வெகுளித்தனமும் தொடங்குகிறது.இதுதாம் அந்நிய அரசுகளதும் குறிப்பாக, அமெரிக்க வல்லாதிகத்தின் தெரிவில் லொபிகளாக மாறிய தமிழ் அரசியற்றலைமைகளைக் குறித்துப் புரியும்போது இன்றைய பிள்ளையான்-கருணா கம்பனியின் சேவகர் ஞானத்தையும் அவரது கருத்துக்களையும் நாம் இலகுவாகப் புரிய முடியும்.

அன்றைக்குத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதியாக எம்.திருச்செல்வமும்,தமிழ்க்காங்கிரசு சார்பில் எம்.சிவசிதம்பரமும் சபாநாயகராக இருந்து நமது தலையில் நெருப்பை அள்ளிப்போட்டது உண்மை.இங்கேதாம் ஞானத்தின் எஜமானர்களான கருணா-பிள்ளையான் போன்றவர்களது இந்தியக் கைக்கூலித்தனத்தின் அரசியலையும் ,திருவாளர் ஞானம் அவர்களுக்காகப் பேசும்-பிரச்சாரப்படுத்தும் மாகாண சபைகளது அரசியல் நியாயமும் புட்டுக்கொண்டோடுகிறது!

தமிழ்பேசும் மக்கள் எப்போதும்போலவே நடாற்றில் கிடக்க,இந்தத் தலைமைகள் வழமையாக மக்களைக் குட்டிச் சுவராக்கினார்கள் -தற்போது அதேயேதாம் இத்தகைய ஆயுத மாபியாக்களும் -அராஜகக் குழுக்களும் செய்து வருகின்றனர்.இதை அனுமதித்து, இத்தகைய அரசியலை செய்யத் தூண்டும் இந்தியப் பிராந்திய நலன்சார்ந்த இந்திய அரசினது அரசியல் வியூகமானது சாரம்சத்தில் இலங்கைத் தேசத்தின் இறையாண்மை மீதே தனது அரசியலை முன்னெப்போதுமில்லாத அதீத அழுத்தத்தோடு விரித்து வைத்திருக்கிறது.இதை மறைத்து, இலங்கை மாகாண சபையானது மக்கள் உரிமைபெறும் வழிமுறையென வகுப்பெடுப்பது, இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் பிரச்சனையின் தீர்வு இருப்பதென்று வகுப்பெடுப்பதைப் போன்றது.

இங்கே, இனவுணர்வென்பது ஓட்டுக்காகவே தவிர உரிமையை வென்றெடுப்பதற்கானதல்ல.இதுள் பாதிக்கப்படுவது மலையக மக்களாக இருந்தாலென்ன இலங்கைப் பூர்வீகத்தமிழரென்று குறிப்பிடும் மக்களாக இருந்தாலென்ன-எல்லோரும் ஒரு நிலமைக்குள்தாம் அன்று இருந்தார்கள்.மாறி மாறி ஆசிட்சிப்பீடம் ஏறும் அரசுகளோடு இந்தத் தலைமைகள்(தொண்டைமான் உட்பட)கூட்டு வைத்துத் தத்தமது பதவிகளை காத்ததென்பது இந்த அமைப்பில் மிகச் சாதரணமானது.ஏனெனில்,இத்தகைய தலைமைகளில் எவர் மக்கள் நலனில் அக்கறையோடு-மக்களுக்காக அரசியல் செய்கிறார்கள்?வடக்கையும்,கிழக்கையும் பிரித்த அமெரிக்க விருப்புக்குட்பட்ட தெரிவில் அண்மித்திருந்த இந்திய-இலங்கை அரசுகள் வடக்கையும்,கிழக்கையும் உணர்வு ரீதியாகவும்,சட்டரீதியாகவும் பிரிக்க முற்பட்டபோது அதைக் கிழக்குக்கு வசந்தமென வகுப்பெடுத்தும்,கிழக்கில் வடமாகாணத்து மக்கள்மீதான கலவதை;தைத் தூண்டியும்,வடக்கின் ஆதிக்கத்துக்கெதிரான நடவடிக்கை இதுவெனவும் பரப்புரை செய்த ஞானம் போன்றவர்கள் இப்போது புதிய கதை விடுகிறார்கள்.

வடக்கும்,கிழக்கும் பிரிவதற்குப் புலிகளே காரணமெனவும்,அன்றை வடக்குக் கிழக்கு மாகாணசபை இயங்கியிருந்தால் இது சாத்தியமின்றிப் போயிருக்குமென விளக்கும் அரசியலானது, இந்திய விஸ்த்தரிப்பை இயங்க அனுமதித்திருப்பது குறித்து பேசுகிறது.இந்தியாவின் பிராந்திய நலனுக்காக இலங்கைப் பேரினவாதத்தால் நசுக்கப்படும் ஒரு இனம் தனது ஐதீக உரிமையைக்கூட விட்டுவிட வேண்டுமென்கிறார் ஞானம்.மிகப் பெரும் அரசியல் பிழைப்பு வாதியாக மாறிய ஞானம், மிக ஆபத்தான அராஜகக் குழுவின் பிரச்சாரப் பீரங்கியாகவிருந்து நடந்து முடிந்த “42 வது இலக்கியச் சந்திப்பில் ” இதையே தொடர்கிறார்.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்தியப் பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!இதற்காக நமக்குள் சாதியப் பிளவுகளையும்,பிரதேச வாதத்தையும் கூர்மைப்படுத்திச் செயற்கைய மக்களைப் பிளந்து அவர்களது உரிமைகளுக்கு வேட்டு வைப்பதிலிருந்து தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக்குழுக்களும், கழகங்களும்,தனி மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் நியாயமான வடக்குக் கிழக்குப் பாரம்பரிய நிலப்பரப்பையும் அதன்வழியான சுயநிர்ணய வாதத்தையும் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.

இதற்கு இந்த தலித்துவக் காரர்களும்,இலக்கியப் பசப்பாளர்களும்,எக்ஸ்சில் ஞானம்போன்ற அதி சதிகார இயக்க அராஜகவாதக்கூட்டணியும் என்று, எல்லோருமே பொறுப்பாளர்கள்.இவர்களை வரலாறு என்றைக்குமே மன்னிக்காது!ஒருபக்கம் புலிப்பாசிசமும் மறுபக்கம், இந்த அந்நிய நலனது கூஜாத் தூக்கிகளுமாக இலங்கைப் பாசிச அரசின் காலடியில் இலங்கைச் சிறுபான்மை இனங்களை வீழ வைத்து அடிமையாக்கினர்.

dalit_Front_Franceஇவர்கள் பேசும் தலித்துவம்கூடப் பிழைப்புவாதம் என்பதற்கு இவர்கள்பேசும் மாகாணசபையை உருவாக்கத் துணை புரிந்த இந்தியாவின் தலித்துகளின் நிலைமையே சாட்யானது!இங்கு திருமாவளவன் வகையறாக்களது அரசியலது விருத்தியே இலங்கையிலும் ஒரு மொன்னைத் தனமான தலித்துவக் குழுக்கள் இந்தியப் பிராந்திய நலனின் பொருட்டு உருவாக்கப்பட்டார்கள்.

இன்றைய இந்தியாவில் 237 மில்லியன்கள் மக்கள் நடுத்தெருவில் காலம் தள்ள-தீண்டத்தகாதவர்களாக இருத்திவைக்கப்பட்டுச் சுரண்டப்படும்போதும்,அந்த மக்களைக் காவு கொள்ளும் அரசியலானது அரசியல்வாதிகளைக் கோடிஸ்வரர்களாக்கியுள்ளது. இது எப்படிச் சாத்தியமாகிறது? ஏனிந்த மக்களுக்கு வாழ்வாதாரவுரிமை இந்தியாவில் கிடையாது? இந்தியக் குடியுரிமை இருந்துவிட்டால் சகலதும் சரியாகிவிடுமா?அல்லது, கூட்டாக’ஜன கண மண்ணாங்கட்டி…’பாடினால் இந்தியர்களாகிவிட முடியுமா?

மனிதர்களைக் கூறுபோட்டுக் கொல்லும் ஒரு சாதி அரசியலுக்கும்,அந்த அரசியலால் எழுந்த சட்ட நிர்ணயங்களுக்கும் இவற்றால் பாதுகாக்கப்படும் இந்திய பொருளாதாரத்துக்கும் எந்த மக்கள் நலனும் கிடையாது.

இதை இலங்கை அரசியலுக்குள்ளும் பொருத்திப் பார்க்குமிடத்தில் ‘துரோகம்’குறித்த குழப்பம் நீங்கி,மக்கள் நலனோடு முன்னெடுக்கும் அரசியல்-அமைப்புகள் விருத்தியாகும் அவசியம் புலப்படும்.

இதைவிட்டு யாழ்ப்பாணத்தான் துரோகமென்ற மொன்னைத்தனமான விவாதம் உருப்புடியாக எதையுஞ் செய்யாது.மாறாக,இன்னும் காழப்புணர்வைக் கொட்டி இந்திய இலங்கை அரசுகளுக்குச் சேவை செய்வதில் உச்சம் பெறும்.

வடக்கு ஆதிக்கம் என்பதன் சமூக உளவியலுக்குள் கட்டி வளர்க்கப்படும் இந்திய-பார்ப்பனிய அரசியல் ஆதிக்கமானது இலங்கைப் பேரினவாதவொடுக்குமுறைக்கு மறைமுகமாகத் துணை போவதென்பதிலிருந்து இந்திய ஆளும் வர்க்க நலனை இலங்கையில் அடைய முனைவாதாகப் பார்க்கப்பட வேண்டும். அதுள், ஞானம் போன்றவர்களது ஏஜமானர்களான கருணா-பிள்ளையான் கம்பனியானது அவர்களது சட்டபூர்வ அடியாட்கள் மட்டுமல்ல மாறாக, இலங்கை மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் எதிர்ப் புரட்சிகரச் சக்திகளென்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி
24.05.2014

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: