„மாவீரர்களை“ப் போற்றுவோம்!

கார்த்திகை 27 : „மாவீரர்களை“ப் போற்றுவோம்!

 முள்ளி வாய்க்கால்வரை „தேசிய விடுதலை“ப் போராட்டமென வரிந்துகட்டிய அனைத்து வாதங்களும் எந்த மக்களுக்காகக் குரல் கொடுத்ததோ அஃது,அந்த மக்களை வேட்டையாடிச் செல்வத்தைக் குவித்திருக்கிறது.இத்தகைய செல்வச் சேர்ப் பாளர்கள் பெருந்தொகையான மக்களைக் கொன்று போட்டுத் தம்மால் சேகரிக்கப்பட்ட மக்களது செல்வத்தைத் தொடர்ந்து தமதாக்கித் தமது வாரீசுகளுக்கு விட்டுச் செல்வதற்காகத் தொடர்ந்து,தொடர்ந்து „தமிழீழம்-தேசியமெனப் புனைவதும்“, „மாவீரர்களாகப்பட்ட „;  தமிழ் மக்களது குழந்தைகளது வாழும் உரிமையைப் பறித்துவிட்டு,அவர்களது கல்லறைகளைக் காட்டியே பணம் கறக்கும் இந்தச் சாபக் கேட்டுக்குப் பேர் „தேசிய மாவீரர் தினம்“ என்பது  ஒரு கேடான காலத்தைத் தொடர்ந்து மறைப்பதற்கானது.

இன்று, „தமிழ்தேசிய வாதமானது“ விதேசியப்பரப்பின் அறுவடையாச்சு! அஃது,வரலாற்றில் ஆற்றிக்கொண்ட அனைத்து மக்கள்விரோத அரசியல் நகர்வும் அதன் குணவியல்பான வர்க்க நிலையின் காரணமானதாகவும்,அந்த வர்க்கவியல்ப்புக்கேற்பத் „தமிழ்த் தேசியமானது“ தனது வர்க்கத்தோடு உலகு தழுவிக் கரங்கோர்த்துக்கொண்டது.அஃது, தனது வர்க்கத்துக்கான வேட்டை நாயாக வளர்ந்தபோது தமிழ்பேசும் மக்களது „சிங்களவின வொடுக்குமுறைக்கெதிரான“ எதிர்ப்புப்போராட்டமானதை தமது எஜமானருக்கேற்பக் கையகப் படுத்தியது.அதற்காக அது, நடாத்திய கொலைகளும்,சர்வதிகார ஆதிக்கமும் அதற்கானவொரு பாசிசப் படையை நிறுவிக்கொள்ளும் தகவமையை அந்நிய சக்திகள் வழங்கிக்கொண்டன.அதன் அதியுயர்ந்த ஒடுக்குமுறைவடிவமே புலிகள் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறதல்லவா?

இதன் தொடர்ச்சியில் அந்த அமைப்பின் பிரதான தலைவனுக்கு என்ன நிகழ்ந்தது?

காற்றடமேயற்று இந்த மனிதன் அழிக்கப்பட்டதற்கு வரலாற்றின் நியாயம் என்னவாக இருக்கும்?

„மாவீரர்களுக்கு“ விழா எடுப்பவர்கள் தங்களது மகாப் பெரிய தலைவனுக்கு வரலாற்றில் என்ன பாத்திரத்தை வழங்கினர்?

இருந்தும் முள்ளி வாய்க்கால் கொடிய முடிவுக்குப் பின்னும் ஐந்தாவது தடவையாக „மாவீரர்“ கதை விடுகின்றார்களென்றால் மக்களது உரிமைகளை ஏலம் விட்டுப் பிழைப்பதில் இத்தகையவர்கள் பெரும் வர்த்தக மாபியாக்களாக இருக்கின்றனர்.மக்களது எந்த நலனிலும் அக்கறையற்ற பிழைப்புவாதிளாக மாறியவொரு கூட்டம் மீளவும், மக்களையும் அவர்களது கொல்லப்பட்ட குழந்தைகளையும் உரிமைகொண்டாடி அதையும், பணமாக்கும் ஒரு கச்சாப் பொருளாக்கியதைத் குறித்து நாம் கவனித்திருக்கின்றோமா?

இன்று,தமிழ்பேசும் உழைக்கும் வர்க்கத்துக்கெதிரான இந்தக் கொடுரமான வர்க்க எதிரிகள் நேரடியாகவே இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தோடு இனம்,மொழி,மதம் கடந்து வர்த்தகச் சூதாட்டத்துள் ஒன்றுபட்டுள்ளனர்.கூடவே, நம்மை ஒடுக்குவதற்கேற்ற பிராந்திய அரசியலையும் தமது எஜமானர்களுக்கேற்ற அவர்களது நிகழ்ச்சிக்குட்பட்டு  நமது  மக்களது பெயரால் „தேசிய மாவீரர்“ தினமெனக் கொண்டாடி நகர்த்துகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையின் தொழிலாள வர்க்கமானது தன்னை இனம்,மதம்,மொழி கடந்து ஒன்றிணைக்கும் சூழலுக்கு வந்தாகவேண்டும். ஒடுக்குமுறையாளர்கள் எப்பவுமே தமது வர்க்கத்தோடு இணைந்தபடிதாம் தமது எதிரி வர்க்கமான பெரும்பகுதி உழைக்கும் மக்களை ஒடுக்கி வருகின்றனர்.இஃது வரலாறு பூராகவும் தேசங்கடந்து வினையாற்றுவதை நாம் அறியவேண்டும்.

முள்ளிவாய்க்கால் முடிவுவரை நமது கண்களைப் பாழாய்ப்போன தமிழ்த் தேசிய வாதக் கயர்வகள் மூலமாகக் குருடாக்குஞ் சந்தர்ப்பத்துக்காக நாம் இடதுசாரிய போராட்ட முன்னோடிகளைப் பிழையாகக் கையாண்டோம்.அவர்களை, ஆதிக்கவாதிகளுக்காகக் காட்டிக்கொடுத்தோம்.பாசிஸ்டுக்கள் கொன்று குவிக்கும்போது பாராமுகமாகப் பாசித்தின்முன் ஒப்புதல் கொடுத்தோம்.இறுதியில், பாசிசமானது புலி வடிவில் மக்களனைவரையும் காயடித்துக் கொன்று குவித்துச் செல்வத்தைக் குவித்துக்கொண்டிருந்தபோது , குத்து-குடையுதென்று ஒப்பாரி செய்தோம்.இந்த வரலாற்றுவுண்மைகளைக் கற்றுக்கொள்வதென்பது இத்தகைய எதிர்க் கருத்தாடல்-வரலாற்று வினைகளுக்கூடானதென்பதை நாம் புரிந்தாகவேண்டும்.எனவேதாம், முள்ளிவாய்க்காலுக்குப் பின் இந்த ஐந்தாவது தடவையாக நம்மை ஏமாற்றும் „தேசிய மாவீரர்“தினக் கொண்டாட்டத்தை அவர்கள் தமது இருப்புக்கான ஆயுதமாக நமக்குள் பயன்படுத்துகின்றனர்.

இவர்களது இந்தக் கொடிய ஆயுதத்தைப் புரிந்துகொண்டோமானால், தமிழ்த் தேசியத்தால் கரி பூசப்பட்ட தமிழ்பேசும் மக்களது விடுதலையின் புரட்சிகரமான வரலாற்றுப் பக்கங்களை நாம் இடதுசாரிகளது குருதியீனூடாகவே கழுவி உண்மைகளைக் கண்டடைய வேண்டிய துர்ப்பாக்கிய வரலாறு கடந்த காலமாக இருக்கும்!.

இனியாவது, ஆதிக்க வாதிகளது அதிகாரத்துக்குப் பக்கப்பலமாகத் „தேசியக் கோசம்“ போட்டொப்புதல்கொடுக்காது, நமது தலைவிதியை நாமே தீர்மானிக்க நமது வர்க்கஞ்சார்ந்து உணர்வு பெறுவோம்.அந்த வர்க்கவுணர்வினது வினையூக்கமானது இலங்கையில் ஒரு தொழிலாள வர்க்க ஐக்கியத்தைத் தரட்டும்!.அதன் பலாபலன்கள் இந்தப் பாசிச அராஜகவாதிகளது „தமிழ்த் தேசிய“க் குருதியாறாக நிச்சியம் இருக்காது.மக்களது வாழ்வையும்,வளத்தையும் சிதைத்துப் „போராட்டம்-விடுதலை“ யென்பதெல்லாம் அதிகார வர்க்கத்தின் பாசிசக் குரூரத் தேவைகளோடு சம்பந்தப்பட்டதென்பதை முள்ளி வாய்க்காலில் அநுபவமாக-வரலாறாக „இன்று“ நாம் தரிசிக்கின்றோம்.இதற்குள்  இவர்கள் கடைவிரிக்கும் „தேசிய மாவீரர்“தினம் என்பதன் அர்த்தம் பணம் பண்ணும் வடிவம் என்பதைவிட அதற்கென்றொரு புனிதமான வரலாறு கிடையாது!அவர்கள் இட்டுக்கட்டுவது பணத்தைச் சுருட்டும் வழியென்பதே உண்மையாகும்!

இந்தவுண்மையின்வழியாக நாம் வரலாற்றில் ஆற்றவேண்டிய பணியானது நமது வர்க்கவுணர்வைக் கண்டடைதலே!அதிலிருந்து பெறுப்படும் சமூகவுணர்வும்,சமுதாய ஆவேசமும் நமது விலங்கை நாமேயொடிக்கும் வலுவை இலங்கை-உலகு தழுவிய வர்க்க ஐயக்கியத்தினூடாக நமக்கு ஏற்படுத்தும்-இது கதை கட்டலல்ல-கனவுமல்ல.வரலாற்றில் நடந்த வர்க்கப் போர்களது பெறுமானம்.

அதைத் தவிர்த்துத் „தேசிய வாதம்“ பேசும் உடமை வர்க்கத்தின் இனவாதக் கருத்துக்குள் மாட்டபட்ட எந்தவினமும் இதுவரை இழப்பையும்,அடிமைத்தனத்தையும் பெற்றதென்பதைத் தவிர விடுதலை பெற்றதாகச் சரித்திரமில்லை.

போராளிகள்,புரட்சி வாதிகள் தமது வர்க்கவுணர்வைவிட்டு,மிதமான நடுத்தரவர்க்கவுணர்வுந்துதலால் உந்தப்பட்டால் அவர்கள்பிழையான பாதையில் பயணிப்பரென்பதை நாம்பிரபாகரன் மூலமாக அறியக் கூடியதாகிறது .“தமிழீழ“ப்   போராட்டத்தில் இப்படி ஆயிரம்பிரபாகரன்கள்,உமா மகேஸ்வரன்கள் வழி தவறிய கதைகளும்-வரலாறுமாக நாம்அநுபவப்பட்டோம்.

இளையவர்கள்,இன்று நீங்கள் „தமிழீழ“ப்போராட்டத்தின்விளைவை மக்களது குவியல் குவியலான சடலங்களுக்கூடாகத் தரிசித்திருக்கிறீர்கள்! இதுவொரு சில அரசுகளது தப்பான செயலல்ல. மாறாக, நமக்குள் இருக்கும் உடமை வர்க்கத்தின் நலனோடு அந்நிய நலன்கள் பிணைவுப்பட்ட வர்க்க நலனிலிருந்து நமது மேட்டுக்குடிகளே நம்மைத் தமது கூட்டோடு-நட்போடு அடிமையாக்கி அழித்துள்ளது.இது வரலாறாக முள்ளிவாய்க்காலில் முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை!

தொடர்ந்து தமது வர்க்க எதிர்ப்பபை அவர்கள் இலங்கை-உலகு தழுவித் தொழிலாள மக்கள்மீது கட்டவிழ்த்தபடியேதாம் அரசியலைச் செய்கின்றனர்.இதற்காகத் தொடர்ந்து நம்மெல்லோரையும்,இனம்,மதம்,மொழி வழி கூறு பிரித்து, இனவாதத் தீயை மீள,மீள மூட்டியே நமது வர்க்க ஐயக்கியத்தை மிக இலகுவாக உடைத்தெறிகின்றனர்.இது ஒரு புள்ளி.தொடர்ந்து கேள்விகள் நம் முன் எழுகிறது.அதைத் தொடர்வது நீங்கள் கொள்ளும்உண்மைகளிலிருந்துதாம்.

இன்று, உலகு தழுவி „இருப்பவர்களுக்கும் இல்லாதவருக்குமான போர்“ சமூக மானிய வெட்டுக்களிலிருந்து அரசுக்கும் மக்களுக்குமானதெனக் காட்டப்பட்டாலும்அஃது, உடமை வர்க்கத்துக்கும்,உழைப்பாளி வர்க்கத்துக்குமானதென்பதை நீங்கள் மிக இலகுவாக அறியும் நிலை ஐரோப்பியவொன்றியத்தின் „யுரோவைப் பலப்படுத்தும் பொறி முறை “ யென்ற ஒடுக்குமுறை-சர்வதிகாரப் போக்குகளிலிருந்து அறியமுடியும்.இதன் தாக்கம் இன்று உலகைப் பங்கு போடும் போட்டி அரசியலாக உக்கிரைனில் மையங்கொண்டுள்ளது! சில வேளைகளில் இதுவே பெரும் அணு யுத்தமாக வெடிக்கும் சந்தர்ப்பம் மிக அண்மையிலிருக்கிறதென்பதையும் நாம் அறிந்தே  தீரவேண்டும்.

தொழிலாளர்களுக்கெதிரான பொலிஸ்-இராணுவ ஒடுக்குமுறையோடு அதன் கருத்தியல் வன்முறையான சட்டம் மக்களது அனைத்துவுரிமைகளையும் அகண்ட ஐரோப்பா-உலகமென இல்லாதாக்கிறது.பணக்காரருக்கும்,ஏழைகளுக்குமான கத்தரிக்கோல் தொடர்ந்து விரிகிறது.அதன் வினை எப்படி-எங்ஙனம் அமையுமென்பது நாம் பெறும் வர்க்கவுணர்விலிருந்தே இலங்கையில் மக்களுக்கான விடுதலையைச் சாதிக்கும் வரலாற்றை இழுத்துவரும்.அதுவரை,உண்மைகளைக் கண்டடைவோம்.அதுவே,எதன் பெயராலும் நாம் கொட்டும் குருதியை நிறுத்தி, நமது விடுதலைக்காகக் குருதியைக் காத்துக்கொள்ளும்.எனவே,இவர்கள் கதைவிடும்“மாவீரர்“தினமென்பது நம்மை ஏமாற்றும் ஒரு வியாபார உத்தியே தவிர நமக்கான விடுதலைக்கான ஆயுதம் அஃதல்ல!

எனவே,இந்த விமர்சனமானது குருதிதோய்ந்த தமிழ்த் தேசிய வாததத்தின் இருண்ட பக்கங்களை அறியும் சந்தர்ப்பத்தை உணர்த்துவதென்பதே பொருள்.“தமிழ் தேசிய“ வாதத்தின் கோர முகத்தை இன்று பலர் பல்கலைக் கழகத்துக்குள் ஆய்ந்து வருகின்றனர்.அவர்கள் தமது தொழில் முறையான வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்துகின்றனர். நாமோ நமது விடுதலைக்கான ஒரு கையேடாக அவர்களது ஆய்வுகள் மாறவேண்டுமென்றே அவாவுறுகிறோம். நாளைய தலைமுறையானது தமது மூதாததையர்களால் விடுவிக்கப்பட்ட சுதந்திர மனிதர்களென்று வரலாறு உரைக்கவேண்டும்.

அதுவே,எமது அவா.அதற்காக, நாம் கைகோர்ப்போம்.கோர்பதற்கு முதல் „யார்-எவர்“எந்த வர்க்கத்தின் சாயலோடு எவருக்காக இயங்குகிறாரென்பதைக் கண்டடைந்தாகவேண்டும்.

எல்லோருக்குமானவொரு வர்க்கங் கடந்த வாழ்வு வந்தாக வேண்டுமெனக் கூறித் தொடர்வோம்- நட்பார்ந்த தோழமைகொள்ள!

நட்போடு,

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

24.11.2014

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: