„மாவீரர்களை“ப் போற்றுவோம்!

கார்த்திகை 27 : „மாவீரர்களை“ப் போற்றுவோம்!

 முள்ளி வாய்க்கால்வரை „தேசிய விடுதலை“ப் போராட்டமென வரிந்துகட்டிய அனைத்து வாதங்களும் எந்த மக்களுக்காகக் குரல் கொடுத்ததோ அஃது,அந்த மக்களை வேட்டையாடிச் செல்வத்தைக் குவித்திருக்கிறது.இத்தகைய செல்வச் சேர்ப் பாளர்கள் பெருந்தொகையான மக்களைக் கொன்று போட்டுத் தம்மால் சேகரிக்கப்பட்ட மக்களது செல்வத்தைத் தொடர்ந்து தமதாக்கித் தமது வாரீசுகளுக்கு விட்டுச் செல்வதற்காகத் தொடர்ந்து,தொடர்ந்து „தமிழீழம்-தேசியமெனப் புனைவதும்“, „மாவீரர்களாகப்பட்ட „;  தமிழ் மக்களது குழந்தைகளது வாழும் உரிமையைப் பறித்துவிட்டு,அவர்களது கல்லறைகளைக் காட்டியே பணம் கறக்கும் இந்தச் சாபக் கேட்டுக்குப் பேர் „தேசிய மாவீரர் தினம்“ என்பது  ஒரு கேடான காலத்தைத் தொடர்ந்து மறைப்பதற்கானது.

இன்று, „தமிழ்தேசிய வாதமானது“ விதேசியப்பரப்பின் அறுவடையாச்சு! அஃது,வரலாற்றில் ஆற்றிக்கொண்ட அனைத்து மக்கள்விரோத அரசியல் நகர்வும் அதன் குணவியல்பான வர்க்க நிலையின் காரணமானதாகவும்,அந்த வர்க்கவியல்ப்புக்கேற்பத் „தமிழ்த் தேசியமானது“ தனது வர்க்கத்தோடு உலகு தழுவிக் கரங்கோர்த்துக்கொண்டது.அஃது, தனது வர்க்கத்துக்கான வேட்டை நாயாக வளர்ந்தபோது தமிழ்பேசும் மக்களது „சிங்களவின வொடுக்குமுறைக்கெதிரான“ எதிர்ப்புப்போராட்டமானதை தமது எஜமானருக்கேற்பக் கையகப் படுத்தியது.அதற்காக அது, நடாத்திய கொலைகளும்,சர்வதிகார ஆதிக்கமும் அதற்கானவொரு பாசிசப் படையை நிறுவிக்கொள்ளும் தகவமையை அந்நிய சக்திகள் வழங்கிக்கொண்டன.அதன் அதியுயர்ந்த ஒடுக்குமுறைவடிவமே புலிகள் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறதல்லவா?

இதன் தொடர்ச்சியில் அந்த அமைப்பின் பிரதான தலைவனுக்கு என்ன நிகழ்ந்தது?

காற்றடமேயற்று இந்த மனிதன் அழிக்கப்பட்டதற்கு வரலாற்றின் நியாயம் என்னவாக இருக்கும்?

„மாவீரர்களுக்கு“ விழா எடுப்பவர்கள் தங்களது மகாப் பெரிய தலைவனுக்கு வரலாற்றில் என்ன பாத்திரத்தை வழங்கினர்?

இருந்தும் முள்ளி வாய்க்கால் கொடிய முடிவுக்குப் பின்னும் ஐந்தாவது தடவையாக „மாவீரர்“ கதை விடுகின்றார்களென்றால் மக்களது உரிமைகளை ஏலம் விட்டுப் பிழைப்பதில் இத்தகையவர்கள் பெரும் வர்த்தக மாபியாக்களாக இருக்கின்றனர்.மக்களது எந்த நலனிலும் அக்கறையற்ற பிழைப்புவாதிளாக மாறியவொரு கூட்டம் மீளவும், மக்களையும் அவர்களது கொல்லப்பட்ட குழந்தைகளையும் உரிமைகொண்டாடி அதையும், பணமாக்கும் ஒரு கச்சாப் பொருளாக்கியதைத் குறித்து நாம் கவனித்திருக்கின்றோமா?

இன்று,தமிழ்பேசும் உழைக்கும் வர்க்கத்துக்கெதிரான இந்தக் கொடுரமான வர்க்க எதிரிகள் நேரடியாகவே இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தோடு இனம்,மொழி,மதம் கடந்து வர்த்தகச் சூதாட்டத்துள் ஒன்றுபட்டுள்ளனர்.கூடவே, நம்மை ஒடுக்குவதற்கேற்ற பிராந்திய அரசியலையும் தமது எஜமானர்களுக்கேற்ற அவர்களது நிகழ்ச்சிக்குட்பட்டு  நமது  மக்களது பெயரால் „தேசிய மாவீரர்“ தினமெனக் கொண்டாடி நகர்த்துகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையின் தொழிலாள வர்க்கமானது தன்னை இனம்,மதம்,மொழி கடந்து ஒன்றிணைக்கும் சூழலுக்கு வந்தாகவேண்டும். ஒடுக்குமுறையாளர்கள் எப்பவுமே தமது வர்க்கத்தோடு இணைந்தபடிதாம் தமது எதிரி வர்க்கமான பெரும்பகுதி உழைக்கும் மக்களை ஒடுக்கி வருகின்றனர்.இஃது வரலாறு பூராகவும் தேசங்கடந்து வினையாற்றுவதை நாம் அறியவேண்டும்.

முள்ளிவாய்க்கால் முடிவுவரை நமது கண்களைப் பாழாய்ப்போன தமிழ்த் தேசிய வாதக் கயர்வகள் மூலமாகக் குருடாக்குஞ் சந்தர்ப்பத்துக்காக நாம் இடதுசாரிய போராட்ட முன்னோடிகளைப் பிழையாகக் கையாண்டோம்.அவர்களை, ஆதிக்கவாதிகளுக்காகக் காட்டிக்கொடுத்தோம்.பாசிஸ்டுக்கள் கொன்று குவிக்கும்போது பாராமுகமாகப் பாசித்தின்முன் ஒப்புதல் கொடுத்தோம்.இறுதியில், பாசிசமானது புலி வடிவில் மக்களனைவரையும் காயடித்துக் கொன்று குவித்துச் செல்வத்தைக் குவித்துக்கொண்டிருந்தபோது , குத்து-குடையுதென்று ஒப்பாரி செய்தோம்.இந்த வரலாற்றுவுண்மைகளைக் கற்றுக்கொள்வதென்பது இத்தகைய எதிர்க் கருத்தாடல்-வரலாற்று வினைகளுக்கூடானதென்பதை நாம் புரிந்தாகவேண்டும்.எனவேதாம், முள்ளிவாய்க்காலுக்குப் பின் இந்த ஐந்தாவது தடவையாக நம்மை ஏமாற்றும் „தேசிய மாவீரர்“தினக் கொண்டாட்டத்தை அவர்கள் தமது இருப்புக்கான ஆயுதமாக நமக்குள் பயன்படுத்துகின்றனர்.

இவர்களது இந்தக் கொடிய ஆயுதத்தைப் புரிந்துகொண்டோமானால், தமிழ்த் தேசியத்தால் கரி பூசப்பட்ட தமிழ்பேசும் மக்களது விடுதலையின் புரட்சிகரமான வரலாற்றுப் பக்கங்களை நாம் இடதுசாரிகளது குருதியீனூடாகவே கழுவி உண்மைகளைக் கண்டடைய வேண்டிய துர்ப்பாக்கிய வரலாறு கடந்த காலமாக இருக்கும்!.

இனியாவது, ஆதிக்க வாதிகளது அதிகாரத்துக்குப் பக்கப்பலமாகத் „தேசியக் கோசம்“ போட்டொப்புதல்கொடுக்காது, நமது தலைவிதியை நாமே தீர்மானிக்க நமது வர்க்கஞ்சார்ந்து உணர்வு பெறுவோம்.அந்த வர்க்கவுணர்வினது வினையூக்கமானது இலங்கையில் ஒரு தொழிலாள வர்க்க ஐக்கியத்தைத் தரட்டும்!.அதன் பலாபலன்கள் இந்தப் பாசிச அராஜகவாதிகளது „தமிழ்த் தேசிய“க் குருதியாறாக நிச்சியம் இருக்காது.மக்களது வாழ்வையும்,வளத்தையும் சிதைத்துப் „போராட்டம்-விடுதலை“ யென்பதெல்லாம் அதிகார வர்க்கத்தின் பாசிசக் குரூரத் தேவைகளோடு சம்பந்தப்பட்டதென்பதை முள்ளி வாய்க்காலில் அநுபவமாக-வரலாறாக „இன்று“ நாம் தரிசிக்கின்றோம்.இதற்குள்  இவர்கள் கடைவிரிக்கும் „தேசிய மாவீரர்“தினம் என்பதன் அர்த்தம் பணம் பண்ணும் வடிவம் என்பதைவிட அதற்கென்றொரு புனிதமான வரலாறு கிடையாது!அவர்கள் இட்டுக்கட்டுவது பணத்தைச் சுருட்டும் வழியென்பதே உண்மையாகும்!

இந்தவுண்மையின்வழியாக நாம் வரலாற்றில் ஆற்றவேண்டிய பணியானது நமது வர்க்கவுணர்வைக் கண்டடைதலே!அதிலிருந்து பெறுப்படும் சமூகவுணர்வும்,சமுதாய ஆவேசமும் நமது விலங்கை நாமேயொடிக்கும் வலுவை இலங்கை-உலகு தழுவிய வர்க்க ஐயக்கியத்தினூடாக நமக்கு ஏற்படுத்தும்-இது கதை கட்டலல்ல-கனவுமல்ல.வரலாற்றில் நடந்த வர்க்கப் போர்களது பெறுமானம்.

அதைத் தவிர்த்துத் „தேசிய வாதம்“ பேசும் உடமை வர்க்கத்தின் இனவாதக் கருத்துக்குள் மாட்டபட்ட எந்தவினமும் இதுவரை இழப்பையும்,அடிமைத்தனத்தையும் பெற்றதென்பதைத் தவிர விடுதலை பெற்றதாகச் சரித்திரமில்லை.

போராளிகள்,புரட்சி வாதிகள் தமது வர்க்கவுணர்வைவிட்டு,மிதமான நடுத்தரவர்க்கவுணர்வுந்துதலால் உந்தப்பட்டால் அவர்கள்பிழையான பாதையில் பயணிப்பரென்பதை நாம்பிரபாகரன் மூலமாக அறியக் கூடியதாகிறது .“தமிழீழ“ப்   போராட்டத்தில் இப்படி ஆயிரம்பிரபாகரன்கள்,உமா மகேஸ்வரன்கள் வழி தவறிய கதைகளும்-வரலாறுமாக நாம்அநுபவப்பட்டோம்.

இளையவர்கள்,இன்று நீங்கள் „தமிழீழ“ப்போராட்டத்தின்விளைவை மக்களது குவியல் குவியலான சடலங்களுக்கூடாகத் தரிசித்திருக்கிறீர்கள்! இதுவொரு சில அரசுகளது தப்பான செயலல்ல. மாறாக, நமக்குள் இருக்கும் உடமை வர்க்கத்தின் நலனோடு அந்நிய நலன்கள் பிணைவுப்பட்ட வர்க்க நலனிலிருந்து நமது மேட்டுக்குடிகளே நம்மைத் தமது கூட்டோடு-நட்போடு அடிமையாக்கி அழித்துள்ளது.இது வரலாறாக முள்ளிவாய்க்காலில் முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை!

தொடர்ந்து தமது வர்க்க எதிர்ப்பபை அவர்கள் இலங்கை-உலகு தழுவித் தொழிலாள மக்கள்மீது கட்டவிழ்த்தபடியேதாம் அரசியலைச் செய்கின்றனர்.இதற்காகத் தொடர்ந்து நம்மெல்லோரையும்,இனம்,மதம்,மொழி வழி கூறு பிரித்து, இனவாதத் தீயை மீள,மீள மூட்டியே நமது வர்க்க ஐயக்கியத்தை மிக இலகுவாக உடைத்தெறிகின்றனர்.இது ஒரு புள்ளி.தொடர்ந்து கேள்விகள் நம் முன் எழுகிறது.அதைத் தொடர்வது நீங்கள் கொள்ளும்உண்மைகளிலிருந்துதாம்.

இன்று, உலகு தழுவி „இருப்பவர்களுக்கும் இல்லாதவருக்குமான போர்“ சமூக மானிய வெட்டுக்களிலிருந்து அரசுக்கும் மக்களுக்குமானதெனக் காட்டப்பட்டாலும்அஃது, உடமை வர்க்கத்துக்கும்,உழைப்பாளி வர்க்கத்துக்குமானதென்பதை நீங்கள் மிக இலகுவாக அறியும் நிலை ஐரோப்பியவொன்றியத்தின் „யுரோவைப் பலப்படுத்தும் பொறி முறை “ யென்ற ஒடுக்குமுறை-சர்வதிகாரப் போக்குகளிலிருந்து அறியமுடியும்.இதன் தாக்கம் இன்று உலகைப் பங்கு போடும் போட்டி அரசியலாக உக்கிரைனில் மையங்கொண்டுள்ளது! சில வேளைகளில் இதுவே பெரும் அணு யுத்தமாக வெடிக்கும் சந்தர்ப்பம் மிக அண்மையிலிருக்கிறதென்பதையும் நாம் அறிந்தே  தீரவேண்டும்.

தொழிலாளர்களுக்கெதிரான பொலிஸ்-இராணுவ ஒடுக்குமுறையோடு அதன் கருத்தியல் வன்முறையான சட்டம் மக்களது அனைத்துவுரிமைகளையும் அகண்ட ஐரோப்பா-உலகமென இல்லாதாக்கிறது.பணக்காரருக்கும்,ஏழைகளுக்குமான கத்தரிக்கோல் தொடர்ந்து விரிகிறது.அதன் வினை எப்படி-எங்ஙனம் அமையுமென்பது நாம் பெறும் வர்க்கவுணர்விலிருந்தே இலங்கையில் மக்களுக்கான விடுதலையைச் சாதிக்கும் வரலாற்றை இழுத்துவரும்.அதுவரை,உண்மைகளைக் கண்டடைவோம்.அதுவே,எதன் பெயராலும் நாம் கொட்டும் குருதியை நிறுத்தி, நமது விடுதலைக்காகக் குருதியைக் காத்துக்கொள்ளும்.எனவே,இவர்கள் கதைவிடும்“மாவீரர்“தினமென்பது நம்மை ஏமாற்றும் ஒரு வியாபார உத்தியே தவிர நமக்கான விடுதலைக்கான ஆயுதம் அஃதல்ல!

எனவே,இந்த விமர்சனமானது குருதிதோய்ந்த தமிழ்த் தேசிய வாததத்தின் இருண்ட பக்கங்களை அறியும் சந்தர்ப்பத்தை உணர்த்துவதென்பதே பொருள்.“தமிழ் தேசிய“ வாதத்தின் கோர முகத்தை இன்று பலர் பல்கலைக் கழகத்துக்குள் ஆய்ந்து வருகின்றனர்.அவர்கள் தமது தொழில் முறையான வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்துகின்றனர். நாமோ நமது விடுதலைக்கான ஒரு கையேடாக அவர்களது ஆய்வுகள் மாறவேண்டுமென்றே அவாவுறுகிறோம். நாளைய தலைமுறையானது தமது மூதாததையர்களால் விடுவிக்கப்பட்ட சுதந்திர மனிதர்களென்று வரலாறு உரைக்கவேண்டும்.

அதுவே,எமது அவா.அதற்காக, நாம் கைகோர்ப்போம்.கோர்பதற்கு முதல் „யார்-எவர்“எந்த வர்க்கத்தின் சாயலோடு எவருக்காக இயங்குகிறாரென்பதைக் கண்டடைந்தாகவேண்டும்.

எல்லோருக்குமானவொரு வர்க்கங் கடந்த வாழ்வு வந்தாக வேண்டுமெனக் கூறித் தொடர்வோம்- நட்பார்ந்த தோழமைகொள்ள!

நட்போடு,

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

24.11.2014

Advertisements

பிதிர்க் கடன்!

முள்ளி வாய்க்காற்

குருதி வரண்ட பின்பும்
வெட்டிச் சாய்த்த கனவுகளுக்குத்
தடுதாட்கொண்ட சனியோ
மெல்லத் துரத்தும் எல்லை வைத்து.
மறுபேச்சுக்கே இடமில்லாதபடி
உசுப்பியெடுக்கும் ஊழிக் காலம்-பிதிர்க் கடன் பாக்கியுண்டு!

தொப்புள்க் கொடித் தொந்தரவு;
சிங்களத்துச் சோதரர்;பாரத மாதாக் கடாட்சம்;
உருவமிழந்த சில நட்பு வெளிகள்
நாலுந் தொலைந்து முட்டுச் சந்தியில் நாம்!

முகமிழந்த காலங்களைக்
கட்டையில் போட்டெரித்துவிடத் துடிக்கும் உணர்வு
மூச்சு முட்டும் நாயோட்டம்
எப்போதும் நடுத் தெருவில் நின்றபடி குரைப்பதும்
இல்லையேல் பிராணனைப் பிடுங்கும் உளைச்சல்

கோலமிட்ட முற்றும்
கொடு நிலவு முறித்த இரவு
கடும் முகில் இழப்பில் கரைந்த வெள்ளம்
காலங்கள் தொலையக் காத்திருந்த
திருவெம்பாவை கடந்த பொங்கல்
இப்போது பிதிர்க் கடன்!

அன்றும்
இப்படி எல்லாம் தொலைத்து;
எல்லாம் தொலைய
தோணீயேறித் தொலைந்தோம் அகதியாகி!

காணாத மனிதரைக் கண்டு
கட்டிய வழி உறவென்றெண்ணி
காணிக்கைகேட்டு
கட்டிய புடவைக்கு மாற்றெடுத்தோம்

எச்சில் இலையாய்
தேசம் தொலைத்த உடல்கள் கொண்டு
தெருக்களில் எடுத்த பிச்சை
குத்தியது கள்ளத் தோணியென்று!

நட இப்படி
கிட அப்படி
எடு இப்படி
எல்லா ஏவல்களும்
முகத்தில் எழுதும் இரவல் நாடென-இலங்கையிற் கூடாவா?

பாட்டன் நாட்டிய மாந்தோப்பும்
பாட்டி வளர்த்த தென்னந்தோப்பும்
பனங்கூடலும் செல்லழித்துச் சிதைய
மொட்டெறிந்த மனிதக் கூடு
குருதியில் தாழ்ந்து அமுங்கியது-இதன் பிதிர்க் கடன்?

இத்தனைக்கும் பிறகு
ஏய்ப்பதற்கொரு புலிப் பூச்சாண்டி
ஊர் நிறைத்த சிங்களத்து ஆதிக்கம்
பிதிர்க் கடன் பாக்கி வைத்த தீர்வுப் பொதி,
கோத்தபாய தீர்க்கும் சண்டித்தனம்!

கோடாலிக் காம்பாய்Sri Rangan Vijayaratnams Foto
குடிகளைக் கெடுத்த இயக்க வாதம்
கோதாரி மாபியாக் கூட்டம்
அன்னையத் துயில் கலைக்க வைத்துக்
கூத்தடிக்கும் ஒட்டுக் குழுக்கள்
பிள்ளையான் கருணா பு….டை ஆண்டிகள்

உலகை ஏமாத்தும்
உயிர் பிரிந்த தேசியத் தலை
ஊரைச் சுத்தும் அவரது உதவாக்கரைகள்
தேசத்தைச் சொல்லி
சேர்த்த மூட்டைகள் பிரித்து
வானொலி,தொலைக்காட்சி நிறுவல்கள் கொண்ட
வர்த்தகத்தின் தொடராய்
மகிந்தாதம் பாதந் தாங்கும்!

பணத்தை இலக்கு வைத்து
பாடைகள் காவும் ஒரு கூட்டம்
பல்லை இளித்துக்
குதறம் இன்னொரு வம்புப் படை
வாய் கிழியும்
வரம்பிட்ட வெருட்டல்கள்!;
மாத்தையாமார்களது மடிகளுக்குள் மல்லிகளது கைகாட்டல்கள்

இப்படியாகத்
தேசமே தொலைந்த பொழுதில்
தோணீயேறிய அந்தக் கணத்தில்
தொலைந்தது அனைத்தும்
துப்பிக்கொண்ட வெற்றிலைச் சாற்றைப் போல்!
என்ற போதும்,
பிதிர்க் கடனுக்காய்
தலைவிரித்துக் கண்ணீர் சிந்துவாள் தமிழச்சி!

Sri Rangan Vijayaratnams Foto

கார்த்திகை 27 என்பது, வெறும் வெற்றுத் தினமென்பேன்-தமிழீழக் கோசத்தைப் போலவே!

தமிழர்களுக்கென்றொரு தேசம் வேண்டுமெனச் சொன்ன மேட்டுக்குடித் தமிழர்கள் இறுதியில்,“தமிழீழ விடுதலைப் போராட்டம்“ செய்ய „அப்பாவி “  இளைஞர்களை முன் தள்ளினர்.இந்தியா, இதை மிக நேர்த்தியாக அமைத்துக் கொடுத்தது: இந்திய ஆயுதங்களது கைதிகளாகத் தொடர்ந்து இளைஞர்கள் சிக்குண்டனர்.

“ செத்தவர்கள்-போராடியவர்கள் “ என்ற தகுதியில், தொடர்ந்து தினமும் தாமும் செத்து , மற்றவர்களையும் கொன்று தொடர்ந்தனர் போரை – இயக்கிய சூத்திரதாரிகள், மனித வளத்தை மட்டுமல்ல அனைத்தையும் சுரண்டினர்!

என்னென்னவோ காரணங்களைச் சொல்லித் தமிழ்ச் சமுதாயத்துள்  „துரோகி-தியாகி“ கள் உருவாக்கப்பட்டனர்,கடந்த 40 ஆண்டுகளாக!

இந்தத் „துரோகிகள்-தியாகிகள்“ வாரலாற்றுள், நாளொரு பொழுதாய்க் கொல்லப்பட்டவர்கள் பல இலட்சம்.என்றபோதும், சிங்கltte_cemeteryள இனவாத அரசுகளால் ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்தும் சிங்கள அரசுகள்-ஆயுத இயக்கங்களென உருவாகிய போராட்டச் சூழலில் இந்தப் பல்வேறு அதிகார  ஆயுதங்களுக்குள் அகப்பட்டு, வகை தொகையின்றித் „துரோகி-தியாகிகள்“பட்டியலோடு செத்த வரலாற்றில்-சாகும் வரலாறு தொடர்கதையாகவிருக்கும்போது நான் எந்தத் தினத்தையும்“மாவீரர்கள்-துரோகிகள்“தினமென அனுஷ்ட்டிக்க மாட்டேன்!

அழிவு அரசியலின் தொடர் சூழ்ச்சிகள் யாவும்“மாவீரர் தினம்“எனக் கொண்டாடியபடியேதாம் உயிர் வாழ்பவர்களை இன்னும், மொட்டையடிக்கிறது!

செத்தவர்கள்-சாகடிக்கப்பட்டவர்களென ஏராளம் குற்றங்களுக்குள் சிக்குண்டுபோன தமிழ் மக்களது வரலாறானது எவரையும் விடுவிக்கப் போவதில்லை!

இதுள், „மாவீரர் தினம்“ குறித்துச் சடங்குத்தனமாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் அப்பாவி மக்களுக்குத் தேவையற்றது.

பலிகொள்ளப்பட்ட தமது சிறார்களைக் குறித்துத் தமிழ்பேசும் மனிதர்கள் தமக்குள்“இல்லாமை“ உணர்வைத் தினமும் தரசிக்கும்போது கார்த்திகை 27 என்பது வெறும் வெற்றுத் தினமென்பேன்-தமிழீழக் கோசத்தைப் போலவே!

ப.வி.ஸ்ரீரங்கன்
27.11.2013

கடாபியை நரபலி செய்ததன்மூலம்…

கடாபி : சர்வதிகாரி

இலிபியாவின் நீண்டகால ஜனாதிபதி மௌமார் அல் கடாபியின் [Muammar Al-Ghaddafi]உயிர் பறிக்கப்பட்டுள்ளது.இதை நோட்டோ இலிபியாவின் இடைக்காலத் தேசியக்“கவுன்சில்“தலைவர் முகமட் இட்சிபிரில் [Mahmud Dschibril]வியாழன், 19.10.2011 இல் தெரிவித்திருக்கிறார்.
மேற்குலக ஊடகங்கள் ஆர்ப்பரிக்கின்றன.அவை,தமது இலக்கும்-பொய்மையும் நன்றாகக் கடைவிரித்து வியாபாரமாவதை (உலகந்தோறும்) பார்த்து மகிழ்கின்றன.

நேட்டோவின் ஒட்டுக் குழுவின் [Rebellen]கையில் உயிருடன் பிடிபட்டுப்போன இலிபியாவின் தலைவர் நேட்டோத் தலைமையின் கட்டளைக்கிணங்கப் படுகொலை செய்பட்டிருக்கிறார்.

இலிபிய வரலாற்றைக் கற்பவர்களுக்கு அத்தேசத்தின் வரலாறு எங்ஙனம் அந்நியப் படையெடுப்புகள் மூலம் சிதறிடக்கப்பட்டதென்பது புரிந்திருக்கும்.கி.மு.700 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இலிபியத் தேசம்-தேசமெனும் கருத்துவடிவம் உருவாகுவதற்கு முன்பே,மூன்று நகரங்களை இணைத்துத் தேசமெனும் வடிவத்துக்கு வளர்ந்துகொண்டது. சபரத்தா,ஓயா,லிபிட்டிஸ் மக்னா [ Sabratha, Oea, Leptis Magna ] போன்ற பெரு நகரங்கள் தமக்குள் இணைந்து  ரிப்போலிற் [Tripolitanien (Drei-Städte-Land) ]அரச பரபாலனத்துக்கு இசைந்தவை.இத்தகைய காலத்திருந்து இன்றைய இலிபியாவரையும் இந்த மண் அந்நியப் படையெடுப்பு-காலனித்துவத்துக்கு உட்பட்டிருக்கிறது.கார்த்தாக்கோ[Karthagos](இன்றைய இருனிசியா)அரச ஆதிக்கத்துக்கு (கி.மு.6 ஆம் நூற்றாண்டு) உட்பட்டபோது, அதன் தலைவிதியை ரோம இராச்சியம் விழுங்குவது நிர்ணயமானது.கி.பி.395 வரையில் ரோமிய இராச்சியத்துக்குள் வீழ்ந்துவிட்ட வட ஆபிரிக்க வலையமானது தனது முழு ஆளுமையையும் இன்றுவரை மீளப் பெறமுடியாமலே போய்விட்டது.

நவ காலத்தில் தேசங்கள் உருவாகி,சுயாதீனமுடையவைகளெனப் பீத்திக்கொண்ட“தேசிய அரசு“வடிவமானது மாற்று இனங்களை ஒட்ட மொட்டையடித்தபோது அவை காலனித்துவம் என அழைக்கப்பட்டது.1934 ஆம் ஆண்டில் இந்த இலிபியா இத்தாலிய இலிபியாவென இத்தாலிய ஏகாதிபத்தியத்தால் அழைக்கப்பட்டது. இப்போது இஃது „நேட்டோ இலிபியாவாக“ மாறிவிட்டதை நான் உணர்கிறேன்.
மன்னன் செனுசி ஐடிறிஸ்[ Senussi, Idris I.] கீழ்-1951 வாக்கில், பேருக்குச் சுதந்திர இலிபியாவாக பிரகடனப்படுத்தப்பட்ட இந்த இலிபியா 1959 இல் எண்ணை வளக் கண்டுபிடிப்புகளால் மேற்குலகத்தின் பிடிக்குள் முழுமையாகவே கொணரப் பல கெடுபிடிக்குள் வீழ்ந்தது. என்றபோதும், 1.செப்டெம்பர் 1969 ஆம் ஆண்டு இலிபியா, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவேண்டிய „புரட்சியின்“ விளைவு, மன்னன் ஐடிறிஸ்,அவன் மனைவி பாத்திமாவையும் [Fatima ]கூட்டிக்கொண்டு கைரோவோக்கு[ Kairo] புகலிடம் புகவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.அதை செய்த „புரட்சிகர தளபதி“ மௌமார் அல் கடாபி என்பது இன்று என் சிந்தையில் நிழலாக விரிகிறது.

பொருளாதார ஒத்துழைப்பு,இராணுவ-எண்ணை விற்பனை உறவுகளென [ vom 1975 schloss Libyen ein Abkommen über wirtschaftlich-technische und militärische Zusammenarbeit mit der UdSSR]இருஸ்சியாவோடு கூட்டுறவு வளர்ந்த 1975 ஆம் வருடக் காலப்பகுதியில் இருஸ்சியா இலிபியாவின் சுயாதீனத்துக்கு ஓரளவு உடந்தையாகவே இருந்திருக்கிறது.

இன்றைய இருஸ்சியாவானது சோசலிசத்தகர்வுக்குப் பின்பான முதலாளியத் தேசிமாகியபின் பலவகைகளில் இலிபியாவைக் கைவிட்டது.அதன் காரணங்கள் பல.குறிப்பாக,இருஸ்சியாவானது மேற்குலகத் தேசங்களுக்குத் தனது சொந்த எண்ணை-எரிவாயு வியாபாரத்தில் அதிக இலாபமும்,முழுக்கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பதால் கடாபியைக் கைவிடவேண்டுமென்று ஜேர்மனியும் வற்புறுத்தியது.இதற்காக ஜேர்மனிய அரசு, இருஸ்சியாவுக்குக் கொடுத்த வெகுமதி „நோர்த் ஸ்றீம்“எரிவாயுக் குழாய்[ Nord-Stream-Pipeline] ஒப்பந்தம்.

இந்தக் குழாய்த் திட்டமானது, எரிவாயுவுக்காக ஜேர்மனிய மக்கள் இருஸ்சியாவில் தங்கி இருப்பதைச் சாத்தியமாக்கி விட்டது.

கஸ்பியின்வலய எண்ணை வளமானது இருஸ்யாவிடமே இருக்கிறது.இதைக் கைப்பற்றும் மகா சதுரங்க ஆட்டத்தை அமெரிக்கா ஜோர்சியா மூலம் ஒக்டோபர் 2008 இல்செய்து பார்த்து(ஜோர்ச்சிய-இருஸ்சிய யுத்தம்) மூக்கு உடைந்துபோனதைத் தற்காலிகமாகத் தேற்றிக்கொள்ளவே இலியாவைப் பலியெடுக்க, ஜேர்மனிய அரசுமூலம் இருஸ்சியாவைக் கட்டிப் போட்டிருக்கிறது.

இலிபியாவின் கூட்டணி-நட்பு நாடுகளாகவும்,எண்ணை வள உற்பதி-ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் செய்த சீன,இருஸ்சிய அரசுகள் தமது சங்காய் ஒப்பந்தக் கூட்டணியையே [Shanghai Cooperation Organisation] ஒரு வியாபாரக் கூட்டணியாக மாற்றிக்கொண்டுள்ளது.

கடாபியை நோட்டோ அணி படுகொலை செய்துவிட்டதானது,கடந்த நாற்பது ஆண்டுகால மேற்குலகத்தின் வட ஆபிரிக்கா மீதான ஆதிக்க ஊசாலாட்டத்துக்குக் கிடைத்த பலமான வெற்றிதாம்.

கடாபியை நரபலி செய்ததன்மூலம், இனி ஸ்த்திரமான ஆதிக்கத்தை வட ஆபிரிக்காவில் மேற்குலகஞ் செலுத்த முடியும்.கடாபி இல்லாத இலிபியாவானது கி.மு.700 ஆண்டளவில் ஏகிப்திய சாம்பிராஜ்யத்தினது வல்லாதிகத்துக்கு உட்பட்ட மண்ணைப்போன்றே இருக்கும்.

1977 மட்டில் கடாபியால் உருவாக்கப்பட்ட சோசலிச அரேபிய மக்கள் குடியரசு  இன்று சர்வதிகாரத்துக்குள் கிடந்த இலிபியாவாக மேற்குலகங்களால் சொல்லப்படினும்,இலிபியாவானது கடாபியால் சிறந்தே இருந்தது.

தேசத்தின் சொத்தாக எண்ணை வளம்,6 இல் இருந்து 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி ,தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சம்பளத்துக்குக் குறைவாகச் சம்பளம் கொடுப்பது  தடுக்கும் சட்டம் கொணரப்பட்டதும்,இலிபியாவிலிருந்து வட-தென் சூடான்வரை சென்ற நீர் பாசனத் திட்டத்துக்கெல்லாம் [ Great-Man-Made-River-Projekt ]படுகொலை செய்யப்பட்ட கடாபியே ஸ்த்தாபகர்.

மேற்குலகஞ் சொல்லும் „சர்வதிகாரி“ என்பது, மேற்குலகத்துக்கும்,தமிழ்ச் சூழலில் புலிப் பயங்கரவாதிகளுக்குமே பொருந்தும்.

மக்களது உரிமை,சுதந்திரம்,ஆதிக்கச் சக்திகளிடமிருந்து எங்ஙனஞ் சிதைக்கப்பட முடியுமென்பதற்கு இன்னும் எத்தனை தேசங்கள் சூறையாடபபட்டு வராலாற்றில் உதாரணமானாலும் புலிவால்களுக்கு இந்த சூத்திரம் புரியவே புரியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.10.2011

வரதராஜபெருமாளு அண்ணாவுக்கு ஒரு ஜோர்…

„ஆக்கபூர்வ“வரலாறின் வரதராஜபெருமாளு அண்ணாவுக்கு ஒரு ஜோர்…


„வந்தாரய்யா வரதராஜப் பெருமாளு-சொன்னாரய்யா மன்னிப்பு,தருவாரய்யா பாரதச் சோப்பு!

„நாணயவான் வாறாரூ செம்பை எடுத்துவை, உள்ளே!“

என்றுரைத்துக் கட்டியமொன்று கடை-வாய் கிழித்து:

ன்றெமது காலச் சூழலானது சூதுநிறைந்த கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாவொரு உளவியற்றாக்குதல்-காயடித்தல்வகைப்பட்ட „மாதிரி பரப்புரைகள்“மலிந்து கிடக்கிறது.

இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சாhந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படுவேண்டும்.

பாரதக் கரச் சேவைக்கு „பாரு நான் வந்தேன்“என்றபடியே பாட்டுக்கட்டும் பெருமாள்களுக்குப் பல்லவி எடுத்துவிடப் பெரி-அரிய,வலிய-சுழிய சுண்ணாம்பு டப்பாக்களும் களமாடிச் சேர்க்கும் கூட்டமெல்லாம் „மண்டை மூட்டைகளை“ மறந்து குலாவிக் குஞ்சம் முடிய…நாமும் நரகத்திலிருந்து அவர் பாதம் நோக்கி-நோக்கி….

அவர் விபரஞ் சொல்ல முனைந்து…

சிங்களமும் சினைகொள் சங்கமித்தையும்களிகொள்பொழுதுக்குள்…

http://www.youtube.com/v/1UVGRmxXbj0?fs=1&hl=de_DE

மண்டைகளில் தடம் புரண்ட விரல்களின் நர்த்தனத்துள் குருதி நெடில்ஓய்ந்தே போனதென்றால் அப்பப்ப மூக்கும் சளிகட்டிக்கொண்டதாக எடுத்தாண்டு கொள்(ல்)க! முன்னைய அரிய க(கொ)லைக்காகப் பின்னைய பொழிவுகள் எல்லாம்-எல்லோர் பெயராலும் வாசித்து,வாசித்து வஞ்சிக்கவென…இதற்குள் கூழ்ப்பானைப் பல்லியாக விஸ்வலிங்கம் சிவலிங்கம், வினை தீர்க்கும் வேலொடு இராமராஜ பகவதர் அண்ணாச்சி,படு அமர்க்களமாக மந்திகள்கூட்டு.பாரிசீல் சந்திப்பு,வானொலியில் வஞ்சிப்பு என்றெல்லாப் பக்கமும் வரதரின் வாய்மொழிப் புலமைகாண் குஞ்சுகள்…

அடாத மழை பொழியுங்கால் விடாத நாடகம் நடாத்தியே காட்டும் ஜில் ஜில் சோனியா-ராஜபக்ஷ தியேட்டர் கம்பனி,நடுவினில் கோமாளிக் குஞ்சுகளாகக் கொக்குத் தலையில் வெண்ணை தடவிப்…“பேச்சு வார்த்தை“பாடம் நடாத்த தென்கோடிப் பேரரசர் தெவிட்டாத டக்ளஸ் மாத்தையா.கிழக்குத் தமிழ் செழித்தோங்க ஜனநாயகப் பசளையிடும் பிள்ளையாரூ-கருணாகர மாத்தையா சிறப்பு அதிரடிப் படைகள் திரண்ட வெண்ணையில் முகத்தைப் புதைத்தபடி வரதராஜ பெருமாளு…இழவு வீட்டில் பெயர்ப் பலகைத் தட்டியை நிறுத்திய ஒரு கணப் பொழுதில் ஓய்ந்தது யுத்தம்,ஒழிந்தது பஞ்சம் கிழக்குக் குடிசைகளுக்குள்-வடக்கு பங்களாக்குள்…அநுராதபுரத்துள் சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டிய முள்ளிவாய்க்கால் பேரரசர் பிரபாகரச் சக்கரவர்த்திக்குப் பின்னாளில் மண்டை பிளந்து துட்டக்கைமுனுவைக் காட்டிய கேடிகளில் பெருமாளும் ஒருவரெனக் கொண்டே தீரவேண்டுமெனப் பொன் கரம் கூப்பிப்பொருளுரைக்கும் நக்கீரப் பேரர்களது நாவலிக்கும் நர்த்தனத்துள்நஞ்சு வைக்கும் நல்ல பொழுதுகளும் நம்மை நெருங்கும்.

முள்ளி வாய்க்காலில் கிள்ளி வைத்த தலையும் பிளந்து,தாகம் தொலைத்த துட்டக்கைமுனுவுக்கு சிங்களத்தில் எடுத்துச் சொல்ல சிங்களமும் கற்றுத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தர வந்துள்ளார் தங்கத் தலைவர் வரதராஜ பெருமாளு.தெவிட்டாத தென்பாண்டித் தமிழிலுரைக்கும் அவர் பாலான „புகழ்“ மாலை கட்ட வட்டக் கலரில் வர்ணந்தீட்டவும்“ஆக்க பூர்வமான“ வரலாறொன்றுண்டெனச் சொல்லப் பலருண்டு பாரீசு மாநாகரில்-மாத்தையா மகிந்தா மடக்கி வைத்த செருப்புக்குப் பட்டில குஞ்சமெனத் „தடுக்குப் பாய் எடுத்து உள்ளே வை நாணயவான் வாறானெனச் சொல்ல“ வம்பு -ஏன்? …ம் கொட்ட எங்களுக்குஞ் சந்தர்ப்பம் வருகிறது.இந்த …ம்—க்குள் பம்முகிற பேரவா பின்னைய பொழுதொன்றில் காகோலை கொண்டெவரை கொளுத்துமோ யான் அறியேன் அச்சோபாவே!

விதியே விதியே வினை முடிப்பாயோ?விண்ணஞ்சும் அதிர்வேட்டுப் போர்முழக்கும் விதித்தப் பல கட்டளைகளில் காலம் அறுந்து சிதைந்தது,சிரித்த தந்தையின் உணர்வுக்குள் சில்லறைகள் கல்லறை அமைக்க,கடுகு தேடிய தாயோ“மாவீரர் மரணம்“அற்ற வீடுகளும் இருக்கக் கண்டாள்.மடியிலே சுமைகொண்ட புலம் ஐந்தும் வதை செய்யப் புக்கினாள் தேசியக் கோட்டை அன்று!செம்மறிவுக் குலப் பேரரசன் முன்னாளும் இன்னாளும் முதலமைச்சுப் பொடிசூடிய திம்புத் திட்டத்து தும்புக் காவடிக்குத் தோள்கொடுத்தான் கொரிலாக்குஞ்சு!பாரதமே-பாரதமே பார் நீ பக்காப் படைப்பு நிலைக் களன்தொடு பங்காளிப் பேரிரைச்சலை!பல்லாக்குத் தூக்க இப்படியும் ஒரு கூட்டம்.பரதேசி-பரதேசி, மோட்டுக்கணக்கொன்றைக் கூட்டி நீ கழிக்கையியே சொருடிங்கர்தம் பூனைக் குற்றுயிரும் பெட்டிக் கதிர் வீச்சும் சுட்டும் பொழுதுக்குள் வாழ்தலும்-சாதலும் ஒருதடவையில்… தமிழ்ப்பெருங்குடியும் இங்ஙனமே-இங்ஙனமே!

கடன்பட்ட நெஞ்சு:

முன்னொரு காலத்தில் முக்கி-முக்கி நானெழுதிய பிச்சைப் பொடி நடைக்குள் குப்பர உன்னை அமுக்கி:

„இராணுவம் தேசியக் கொடிக்கு மட்டும் மரியாதை செய்யும் பட்சத்தில் தனி நபரின் மரணம் எதையோ உரைத்துச் சொல்கிறது“.-காப்டன் கூறிக்கொணடான்

„ஒரு இராணுவப் படையணி நகரொன்றை மட்டும் பிடித்து எதிரியை வேட்டையாடும்போது இவ்வூழ்வினையுள் ஏதோவொன்று நிலவுகிறது.“-ஜெனரல் கூறிக்கொண்டான்.

தேசாபிமானி கூறினார்:-“ இறுதி மனிதன் இருக்கும்வரை நாம் போராடிச் சாகவேண்டுமானால்,இச் சாவு தாய்நாட்டிற்காக மட்டும் உபயோகமாக வரவேண்டும்“.

தூரநோக்குடைய பண்பாட்டு வரலாற்றியலாளர் தூரப்பார்த்துவிட்டுக் கூறுகின்றார்:“ எப்போதாவது இரு நாடுகள் -இரு இனங்கள் சுயமாகச் சிதைவுற்றுப்போனால்-அவை வீணான காரணங்களுக்காகச் சிதைவுற்றுப்போகவில்லை.உலகம் தன்னைத் தானே ஞாபகப் படுத்திக் கொள்வதும்,புதிதாய் மலர்வதும்,மேல்நோக்கி வளர்வதும் வேண்டும்.கூடவே தனது இரத்தக்கறை படிந்த மனித வரலாற்றை கழுவியாகவேண்டும்“.

முதிர்ந்த புத்திஜீவி தனது குளிர்ந்த விரல்களால் நீண்ட தாடியைத் தடவியபடி:-“ குழப்பம் நிறைந்த பழைய முதலாளியத்தை- நவகொலனித்துவத்தை எடுப்போம்,உலகம் ப+ராக மீளவும் இவர்களால் குற்றச் செயல்கள் செய்ய எப்படிச் சாத்தியமாச்சு?தோட்டத்துக்குப் பசளையிடுவதுபோன்று மனிதம் பலியாக்கப் பட்டு-கொலையாக்கப்பட்ட ப+மிப் பகுதியை மூடி மறைத்து, காத்திராது தங்கள் அறுவடையை செழிப்பாக்கி வளர்த்தெடுக்கிறார்கள்.கூடவே பாசாங்கு விளையாட்டுப் போட்டிகளால் வேறு மக்களைச் சுரண்டியும்,அவர்கள் மூளையைச் சலவை செய்தும்…!“ மீளவும் தலையைச் சொறிந்தார்,வானத்தைப் பார்த்தபடி.

கடவுள் கூறிக்கொண்டார்:-“ எனது சூரியக் குடும்பம் இருபத்தி நான்காவதுக்கு,அரேபியும்-ஆங்கிலமும்-மூத்த குடித் தமிழும்… தொலைந்தது இந்தப் பூமிக் கிரகம்.இது சௌபாக்கியமான அர்த்தம் நிறைந்ததாக இப்போது தோன்றுகிறது. சிலவேளை இப்படித் தொலைந்தது நன்மையே! என் விருப்பத்தின் பொருட்டு எப்போதாவது இந்த எல்லாச் சூரியகுடும்பத்தையும் பிரபஞ்ச ஒழுங்குக்கு பொருந்தி வரக்கூடியதாக மாற்றிக்கொள்ள…“ ஆத்திரப்பட்டுக்கொண்டார்.

„என் பிள்ளைகள் பத்திரமாக மீளவும் வீடு திரும்புவார்களென்றால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று விட்டுவிடலாம்“.- வன்னியிலிருந்து திருமதி.சுப்ரமணியம் கூறிக்கொண்டார்-அன்றும்,இன்றும்.

வேறு-வேறு:

கொய்பிள்ஸ்சும் தோல்விகாண,கோவேந்தர் வரதருக்கு வாழ்த்துரைக்க வந்தானே எம் மகராசா புஷ்பா அண்ணாவின் புனைவொன்றைக்காவிக் காவி… கப்பலேறிக்கொடும் அஞ்ஞாதவாசத்துள் கொள்ளி வைக்கத் திண்ணைக்கு வந்தான் மண்டையன் வரதராஜப் பெருமாளு.தள்ளி நில்!

வேறுக்கும் வேறான வேடம்:

கே.பி.மாமா மோப்பம் பிடித்து மெல்லச் சொல்லும் அபிவிருத்தியில் எட்டிப் பிடிக்கும் புனர்வாழ்வை புலிக்கு வால் பிடித்த பின்னைய பன்னப் பாய் படுக்கைக்குரியதுகளுக்கு அம்பு வைத்து ஆட்டுகிறார் அவர்கள் புலிப் போராளிகளென. புண்ணாக்குகளும் நம்பிக்கொண்டிருக்க நாடகத்தின் தொடர்கள் நல்ல நடிகர்களைத் தேடுகிறது.இங்கும் அங்குமென சந்திப்பு-ஒத்திகையென மண்டையன் குழுத் தலைவரோ அந்தப் பெருமாளுக்கே தண்ணிகாட்டி மன்னிப்பு வேறு… ரீ.பீ.சீ வானொலியும் வகுப்பெடுக்கும் பித்தளைத் தங்கம் பின்னைய இரவில்மக்களுக்கு அடிப்படை வாழ்வாதார வகுப்பெடுக்க சிரசுகள் பறித்த ஆவிகள் தொடரும் அந்தா-இந்தா,முன்னாள் முதலமைச்சர் மண்டையன் குழுவின் வேட்டைப் பொழுதில்…

15 வருடத்து அஞ்ஞாத வாசத்து „தோ லருக்கு“ப் பொன்னாடை போர்த்துவதற்கு இன்னொரு பொதுவரங்குகொள் நல்ல கலைஞர்கள்-கவிஞர்கள் பெருக்கெடுக்க பண் ஊதத் தேவையென பெரு விளக்கஞ் செய் புன்னையில்லா பேரளகர்களும் இங்கே உண்டு-உண்டு!“கொல்லையில் கிடக்கும் மண் குடத்தை எடுத்து நீ உள்ளே வை-உள்ளே வை!“கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டால் நீ அழுதுண்டு அடுக்கிவிடு அப்பன்,ஆத்தையில்ல ஊருக்கு அடுப்பெரிக்கவே வக்கில்லையென.

கொட்டைபோட்ட சிரசு அறுப்பர்கள் மொட்டை போட்டு நாமமிட 15 ஆண்டுகளுக்கு வகுப்பெடுத்து நம்மையெல்லாம் தேடிக்கொள்ள நடரோட்டில் ஆண்டி வேறு அகப்பட்டானே!

ஆட்கொள்ளல் கண்டு அரண்ட பொழுது:

„டொலர்களில் பரிமாற்றும் மேற்குலகில் செய்வததென்றால் பிடித்தசிறார் வீடு மீள்வாரென“ தமிழ் நியாயம் சொல்ல நிலவு, அடிவானில் அமிழ்ந்து, வானம் சிவந்தது-அன்று! இன்று, வர்ணக் கலவையில் வகுப்பெடுக்கும் தோரணையில் எங்கள் நாவலனும் என்ன அழகோ எப்படியழகோ!எட்டுத் திசையும் இருண்ட பொழுதில் பாரதத்தின் பாட்டி „காக்க வடை சுட்ட கதை கேளென“ பக்குவமாய் பாக்குத் தறித்து பாடையில் போக்குவதற்கு தேசிக்காய் தேடியெடுத்து அரிந்து அப்பால் வீசுகிறாள்.

பிற்குறிப்பு:

எனது கைகளிலிருந்த வறுத்த வேர்க்கடலை வாயிலிருந்து ஏதோவொரு அமிலமாக வெளிச்சத்துக்கு வந்தது.

இலங்கையரசு தமிழ் மண்ணை மட்டுமல்ல அழித்து வருகிறது என்ற தொடரில்… வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழருக்குச் சொந்தமில்லையென்றும் அழுது வடிந்த ஜீ.ரிவி மக்களை,குடும்பத்தலைவரை,சிறார்களை,பெண்களைக்குதறி… பத்திரிகையாளரைக் கைதும் செய்து கஷ்ரடியில் வைத்துக் கொல்வதென்றதை விட்டுவிட்டதாகப் புலிகள் சர்வதேசத்துகுச் சொல்லும் செய்தியும் தோன்றக் கண்டார் கையிலை மலையில்.

வாஸ்த்தவம்தான்!,வாடிய பயிரைக் கண்டபோது வாடியவர்கள் „அவர்கள்“மட்டுமல்ல நம்ம தேசத்துச் சிங்கள-தமிழ் „தோலர்களும்“தாம்.

„தாங்காதம்மா தாங்காது,கொலைத்தாகம் தீர்ந்து போகாதம்மா போகாது!“தம்பிக்குத் தங்கைக்கு பெட்டிக்குள்ள பெரு வீரம்,பேரென்னவோ“பெரியாருக்கு“-போருக்குள்ளே

புகழுண்டு, ஊருக்குள்ளே இழவுண்டு!

நோட்டு கனவு கொட்டக் கொட்ட வடக்கு மறுத்துக் கிழக்கைப் பிரி,வலிந்த பக்ஷ வாரித்தந்த „தீர்வை“மாகணங்களுக்குள் கண்டபோது சபைக் காச்சல் ஏறிய டிகிரியில் சொக்கிய குருதி நினைவைப்பறிக்க மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய… வந்தாரய்யா வரதராஜப் பெருமாளு-சொன்னாரய்யா மன்னிப்பு,தருவாரய்யா பாரதச் சோப்பு!

ப.வி.ஸ்ரீரங்கன்

05.11.2010

இயற்கையெய்திய சிந்தனைப் பராவின் இறுதி அஞ்சலி…

இயற்கையெய்திய
சிந்தனைப் பராவின்
இறுதி அஞ்சலி…

மனம் பரதவிக்கத் தாங்காத அழுகையில் மண்டபம் அலற அகம் உடைந்து போனது.சிந்தனைப் பரா அவர்களின் மரண இறுதி அஞ்சலி நிகழ்வில் மண்டபம் நிறைந்த அவரது உறவு வட்டத்தோடே இறுதிப் பந்திகொண்டார் பரா அவர்கள்.நெஞ்சை உடைத்தெறியும் துக்கம்.மரணவீட்டில் அவர் துணைக்கு ஆறுதல் சொல்லியபோது மல்லிகா அம்மா விக்கியடி மெளனமானார்.

மரணம்,கொடியதுதாம்!எனினும்,தவிர்க்க முடியாதது.

மண்டபம் நிறைந்தவர்களின் மனங்களிலெல்லாம் மரணத்தின் வலி தெரிந்திருந்தது.

பரா அவர்கள் நீண்ட பெருவாழ்வு வாழ்ந்து ஆயுளை நிறைவு செய்துள்ளார்.
இது, நேருகின்ற தரணத்தை எதிர்கொள்வது அவசியமே.

திரண்ட மக்களின் திறந்த வாய்களில் மரணத்தின் வலியைவிடத் தாம் கொண்ட அரசியலை முன்னிலைப்படுத்தும் ஒரு எண்ணப் பாங்கு இவ்வஞ்சலி நிகழ்வில் விரிந்துமேவியது.ஒரு நிமிடம் பேசுபவர்கள் ஒன்பது நிமிடமென்ன அது தாண்டி, மணிநேரம் உரை சொல்லும் நிலையை அடைந்தனர்.சிலர் மேடைப் பேச்சை உருப்போட்டபடி முஷ்டியை மேல் நோக்கி உயர்த்தி நுனி நாவு ஆங்கிலத்தில் அரசியல் விரிவுரை வைத்தார்கள்.

ஆனால்,குடும்பத்தின் ஒரு உறுப்பினரை இழந்த கவலை பரா மாஸ்ரரின் குடும்பத்துக்கு!

இதைப் புரிந்தவர் எவர்?

அகமொப்பி,வலியின் சுமைகாவி,இழப்பால் மனம் பொருமியபடி நாம் கொண்ட பஞ்சத்திலும் அவரது துயர நிகழ்வில் பங்குறுவதும்,உடைந்துபோன அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலான மெளன அஞ்சலிக்கும் உணர்வை அஞ்சல் செய்வதைவிட்டு,ஆர்ப்பரித்து அறைகூவலிடுவதற்கு, இந்நிகழ்வு கட்சியின் அரசியல் மேடையல்ல.என்றபோதும்,பரா அவர்களைச் சிறப்புச் செய்யும் உணர்வுகளின் மெளன அஞ்சலிகளையும் நாம் காணத் தக்கதாகவே இருந்தது.


தந்தையை இழந்த பிள்ளைகளும்,கணவனையிழந்த துணைவியுமாக வலிகளைச் சுமந்து மெளனித்திருந்தார்கள்.

நாம் கண்ட பூரிப்பான குடும்பம் ஒளியிழந்துபோய் இருண்டு கிடக்க இதயம் வலிக்க ஆரம்பித்தது.

பரா அவர்களின் இந்த மரண நிலை மனதுக்குள் பொதுமையானவொரு வலியை ஊன்றி விதைக்க, எனது மனது ஊரைக் காணப் புறப்பட்டது.நடுத்தெருவில் நாய் சுடுவதைப்போல் மனிதர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்!கொட்டிலில் பசியோடு மல்லுக்கட்டிக் குறைத் தூக்கம் செய்யும் அப்பாவிகளின் தலையில் பாரிய குண்டுகளை வானத்திலிருந்து உருட்டுகிறது சிங்கள அரசு.இங்கே, வாழவேண்டியவர்கள் இடை வழியில் தொலைந்து போகிறார்கள்!மரணங்கள் வலிக்கிறது.

இழப்புகள் நாளாந்தம் தொடர்கதையாகும் சூழலின் மனிதர்கள் நாம்.

அஞ்சலி செலுத்துபவர்களுக்கு தாம்சார்ந்த அரசியலை முன்னிலைப் படுத்துவது பெருநோக்கு.

பரா செயற்பாட்டிலிருந்தவர்.அவரோடு இணைந்தவர்களே கூடியிருக்கிறோம்.இருந்தும் பரா அவர்களின் வரலாறு விரிந்தது.

வலியைப்பேசுவதிலும் தாம்கொண்ட அரசியல் முன்னிலையெடுக்க நாம் கூடிய நோக்கம் சிதைகிறது.

இது, மரணவீடு.நாம் கூடியிருப்பது துயரில் பங்குற்று அஞ்சலிப்பதற்கு.

நாம்கொண்ட இயக்க-கட்சி வாழ்வானது மரணங்கள்மீது அரசியலைச் செய்து பழக்கமானது!

போராட்ட வாழ்வுக்குப் பின்பு மக்களின் சமூகவுணர்வுத் தளமானது மரணத்தின் வலியை மறந்த மனோபாவத்தை எமக்குள் வலிதாகவே விதைத்தெறிந்துவிட்டது.இந்த விதை மரமாகி வருகிறது.மரணங்கள்மீதும்,அந்த வலியின்மீதும் நாம் வீரகாவியம் படைக்கிறோம் அல்லது, சமய மனதுகொண்டு புனித காவியம் செய்கிறோம்.மரணத்தின் சமூகத் தன்மை இயல்பானது.இயற்கையானது.இதனால் விரிந்துவரும் வலி-இழப்பின்பால் தோன்றும் மிகையுணர்வின் தாக்குதலில் பாசம் கையறு நிலையெடுக்கிறது.இந்நிலையிலிருந்து தேறுவதற்கான தேற்றம் இன்றி,போற்றுதலும் புகழுதலும் வலியைக் கொச்சைப்படுத்துவதாகும்.

எங்கே,எது பேசுவதென்பது எல்லோருக்கும் புரிவதில்லை!

இன்றைய இலங்கை நிலவரத்தில்,கொடூரமான சிங்களப் பாசிசத்தாலும்,அந்நிய ஏவல் நாய்களாலும்,புலிகளாலும் பொதுமக்கள் வாழும் வலயத்தில் குண்டடிபட்டு மக்கள் பெருந்தொகையாக மரிக்கிறார்கள்.சிறார்கள் செல் தாக்கிச் சிதைகிறார்கள்.துரோகி சொல்லிக் கொல்வதும் எல்லைமீறி வகைதொகையின்றி நடந்தேறுகிறது.இங்கே மரணமென்பதும்,அதன் வலியும் பொதுமையாகிறது.குண்டுகளைக்கட்டி தற்கொலைக் குண்டுதாரிகள் கண்முன்னே வெடித்துச் சாகிறார்கள்.

குருதியாற்றில் மிதக்கும் மரணத்தின் வலி வலியது!அந்த வலியை உணருகின்ற மனமானது மனித கணங்களுக்குள் மெளனத்தால் ஒன்றிப்பது மகத்தானது.கொடிய இழப்பில் தேற்றுதலுக்குப் பதில் மேடை அரசியல் ஒப்பேறுகிறது.துயருறும் தரணங்களுக்குள் துன்பத்தை மேலும் விருத்தியாக்கும் இத்தகைய வெற்றுக்கூச்சல் இறுதி அஞ்சலி நிகழ்வை இன்னும் தாழ்த்திச் செல்கிறது.மரணவீட்டில் மடைதிறந்த வாய்வேஷம் அவசியமற்றது.இத்தகைய வாய் வேஷங்களை இயக்க-கட்சி அரசியலுக்குள் வழக்கமாகப் பார்த்த நமது மனங்கள், அத்தகைய போலிக் காட்சியின் பின்னே மெய்மை வலியை உருவகப்படுத்துகிறது.இங்கே, அது மலினப்பட்ட செயலை எம் முன் தள்ளி எம்மைக் கொச்சைப் படுத்துகிறது.மரணித்தவரின் குடும்பத்தின் வலியைக் கேலிக் குள்ளாக்கிறது.

தமிழ் பேசும் மக்களின் எந்த இழப்பிலும் தன்னை முன்னிலைப்படுத்தும் ரீ.பீ.சீ(T.B.C) வானொலியானது எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமாகப் பரா அவர்களின் இறுதி நிகழ்வையும் விட்டு வைக்கவில்லை.தன்னை முற்போக்கு வட்டத்துக்குள் திணித்துத் தன் இந்தியக் கைக்கூலித்தனத்தை மூடி மறைக்கும் தேவையில் அந்த வானொலி தலைகால் புரியாதபடி அலைகிறது.இந்திய மத்திய அரசின் விசமிகள் எங்கும் கால்பரப்ப முனைகிறார்கள்!-கூடவே, மரணவீட்டில் தன் பத்திரிகையை „இலண்டன் குரல்“ அறிமுகப்படுத்தியது.எல்லாம் உள் நோக்கத்தின் தொடர்கதையாக…

பரா அவர்களின் இழப்பில் துயருற்ற அவரது குடும்பமும் இந்தவலியை அநுபவித்தாலும் மரணத்தின் தடம் நம்மிடம் பெரும் வலியைப் பொதுமைப்படுத்திச் செல்கிறது.

இதன் சொல்லமுடியாத உணர்வை-உள்வலியை எந்த மொழியாலும் வெளிச் சொல்ல முடிவதில்லை.இருந்தும் கூச்சல் தொடர்கதையாக…அதையும் ரீ.பீ.சீ.யும் இராமராஜனும் விட்டபாடில்லை!

நாம் மெளனித்த கணங்களுக்குள் பரா குடும்பத்தின் வலி உணர்வலைகளில் ஓயாதவொரு அதிர்வைச் செய்கிறது.இந்த அதிர்வு இலங்கையெங்கும் பலி கொடுக்கப்பட்ட குடும்பங்களோடு பொதுமையாகிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
27.12.2007

>சிந்தனைப் பரா அவர்களுக்காக நெஞ்சோடு நெருங்கி…

>

சிந்தனைப் பரா அவர்களுக்காக நெஞ்சோடு நெருங்கி…

தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை, எவரெவரோ தீர்மானிக்கும் அரசியலாக முன்னெடுக்கப்படுவதில் அந்தக் குறிப்பிட்ட மக்களே இப்போது பலியாகி வருகிறார்கள்.மக்களின் அதீத வாழ்வாதாரத் தேவைகளுக்காக-இலங்கையில் யுத்தத்தை நிறுத்து என்று ஓங்கியொலித்த ஒரு குரல் ஓய்ந்து-பந்திகொள்கிறது!,தோழர் புஷ்பராஜாவுக்குப் பின் புலம் பெயர் சூழலில் இன்னொரு ஆளுமையை நாம் இழக்கிறோம்! மிக அமைதியான மனிதரும்,கருத்தாளுமை மிக்க சிந்தனையாளருமான தோழர், சிந்தனைப் பரராஜசிங்கம் அவர்கள் 16.12.2007 காலமாகியதைத் தோழர் இரயாவின் மூலமாகவே நான் முதலில் தெரிந்து,அறியக்கூடியதாக இருந்தது.

எனக்கும் சிந்தனை ஆசிரியருக்குமான தொடர்பு 1989ஆம் வருடமே ஆரம்பமாகிறது.தெரியாதவரைக்கூடத் தெரிந்தவராகக் கருதிப் பழகும் அவரது முதற் சந்திப்பே எனக்குச் சுகமான அநுபவமாக இருந்தது.அவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம் காரணமாக நான் அவரை“ஐயா“என்றே அழைப்பதுண்டு!எனது தந்தையாரைப் பார்ப்பதுபோன்றவொரு உணர்வு அவ்வப்போது எழுவதுண்டு.மல்லிகா அம்மாவையும்,பரா மாஸ்டரையும் 89 ஆம் ஆண்டு அவர்களது (முன்னர் வதிந்த) ஸ்ரூட்கார்ட் வீட்டினில் சந்தித்த காலம் கண் முன் விரிகிறது!

எந்த வயது வித்தியாசமுமின்றி அந்த அறிஞர் என்னோடு உலக சோசலிசப் போக்குகள்-விஞ்ஞானத்தின் இருப்போடு நிலைபெறும் முதலாளிய வியூகம் குறித்தெல்லாம் நீண்ட நேரம் விவாதித்தார்.மிக எளிமையான மனிதர்.இறுதியாக அந்த மனிதனை கலைச் செல்வனின் மரண இறுதி நிகழ்வில் பாசத்தோடு முத்தமிட்டேன்.அதன் பிறகு அவரைக் காணேன்!

இப்போது, நம்மிடமிருந்து பரிபூரணமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார்!

நான், அவரோடு இலக்கியச் சந்திப்பு நிகழ்வைக் குறித்த அவரது பார்வைகளோடு முரண்பட்டிருக்கிறேன்.எனினும்,அவர்மீதும்,அவரது நாணயத்தின்மீதும் மிகவும் மதிப்பை என்றும் வைத்திருந்தே வந்திருக்கிறேன்.தான் கொண்ட அரசியல் வாழ்வுக்கு மிக உண்மையாகவும்-மக்களின் உரிமைகளைத் தனது வாழ்வுக்காக வளம் சேர்க்கும் மூலதனமாக்காது என்றும் மக்கள் நலப் போராளியாகவே பரா அவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.

மகத்தான பணிகள் நம் முன் கிடக்கிறது.இதை மிக நேர்த்தியாக அறிந்தவர் பரா அவர்கள்!

எனவே,அதுள் தன்னால் முடிந்தவரை-தனது எல்லைக்குட்பட்டவரை பரா அவர்கள் பணியைத் தொடர்ந்திருக்கிறார்கள்.இந்தப் பணியின் தொடராக அவர் புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் „பெருந்தாக்கஞ் செய்த எண்ணங்கள் சஞ்சிகை“ நின்ற பின் சிந்தனை எனும் சஞ்சிகையைத் தொடராக வெளிக்கொணர்ந்து, நம் எழுத்துகளுக்கெல்லாம் களம் அமைத்தார்.நான் அறியப் படைப்பாளிகளை முழுமையாக வெளிப்படுத்தியவர் சிந்தனைப் பரா அவர்கள் மட்டுமே.தனக்கு முரண்பாடாக அல்லது உடன்படாதவற்றைக்கூடத் தனது பத்திரிகையில் கத்திரிவைக்காது பிரசுரித்தவர் அவர்மட்டுமே.

பெரும் ஜனநாயகப் பண்புமிக்க நாணயமான மனிதர் என்பதற்கு அவரது அணுகு முறையே சாட்சிபகர்பவை.

ஆனால்,இலக்கியச் சந்திப்பில் அவரது போக்குகள்,ஆளுமைகள் குறித்து விமர்சனங்கள் எனக்குள் உண்டு.அது கடந்த அவரது அரசியல் நிலைப்பாட்டிலும் இருக்கிறது.என்றபோதும், ஒரு அற்புதமான நட்புள்ளங்கொண்ட நல்ல பெரியவரை இழந்தது மனதுக்குக் கஷ்டமாகவே இருக்கிறது.அவரோடான உளப்பூர்வமான உறவுற்ற தரணங்கள் நெஞ்சில் விரிகிறது.அந்த நெஞ்சோடு நல்ல மனிதரைக் குறித்த நிறைந்த ஞாபகங்கள் உணர்வைப் பிழிந்து,விழிகளைக் கசக்கவைக்கின்ற இந்த அவரது மரணம் மிகவும் வலிக்கிறது.

இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் தமது சமூக சீவியத்தைப் பெரிதும் அழியவிட்டுத் தகர்ந்த சமூக வாழ்வை அரைகுறையாக மீட்டு வாழ்ந்து,உயிரைப் பிடித்திருக்கும் இந்தச் சூழலில், அவர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்கும்,அதை மீளக்கட்டியொழுப்பி அவர்களின் உயிர் வாழ்வை உறுதிப்படுத்தும் ஜனநாயகப் பண்புகளைக் கோரிக் கொள்ளவும்- குடிசார் மதிப்பீடுகளை நிறுவிக் கொள்ளும் குடியியல் முறைமைகளை நோக்கிய- இராணுவ,பொலிஸ் முகாம்கள் அகற்றப்பட்டு, வாழ்விடங்கள் மறுபடி மக்கள் வாழும் ஆதாரங்களாக நிறுவிக் கொள்ளும் முன் நிபந்தனைகளை வைத்துத் தினமும் கருத்தாடியவர் சிந்தனை ஆசிரியர் பரா அவர்கள்.யுத்தைத் நிறுத்தக் கோரித் தன் வலுவுக்கு உட்பட்டவரைத் தன் துணைவி மல்லிகா அம்மாவோடு இணைந்து படைப்புகள் கருத்துக்கள் எனத் தொடர்ந்து எழுதியும் உரையாடியும் வந்தவர்.இவரது பிரிவில் நானும் துயருறுகிறேன்,அவர்களது குடும்பத்தவர்களைப் போலவே!

மல்லிகா அம்மாவுக்கும்
அவர்களின் குழந்தைகளான உமா சானிகா
சந்துஷ் ஆயோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம் உண்டு!

மக்களின் அதீத மானுடத் தேவையான உணவு,உடை,உறையுள் யாவும் இலங்கையின் யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கைக்கெட்டாத கனியாக்கப்பட்டுள்ளது.இதனால் யுத்தத்துக்குள் வாழும் தமிழ் பேசும் மக்களின் அதீத மனிதாயத் தேவையாக இருப்பது அவர்களது உயிர்வாழும் வாழ்வாதாரங்களே என்று அடிக்கடி கூறிக் கொண்டவரும்,தனது அரசியல் வாழ்வை உலகத் தொழிலாளவர்க்கத்துக்குள் இறுகப் புதைத்தவரும் தோழர் பரா அவர்கள்.எமது சமுதாயத்தில் நிலவும் மிகக் கொடூரமான கருத்தியல் ஒடுக்குமுறைக்கு-ஜனநாயக மறுப்புக்கெதிராகத் தொடர்ந்து போராடிய,மறுத்தோடிப் போராளியின் வாழ்வு நிறைவு-உலகத்தின் மூலத்தோடான இணைவு எம்மை மிகவும் பிரமிக்க வைப்பது.அந்த வகையில் சிந்தனைப் பரா வெற்றியாளனே!

அவரோடு கருத்தாடி,முரண்பட்டு,“ஐயா“என்று உறவுற்று வந்திருக்கிறேனென எண்ணும்போது பெருமிதமாக இருக்கிறது.

„வாருங்கள்“

„இருங்கள்“

„சுகமாக இருக்கிறீர்களா?“ –

என்று மிகப் பெரிய மனிதருக்குக் கொடுக்கும் மரியாதையை எனக்கு-எமக்குத் தந்தவர் பரா அவர்கள்.எந்தப் பொழுதிலும் புன்னகை குவிந்த முகத்தோடு தந்தையாக எனக்கு முன் விரிந்த அவரது உடல் இன்று இயங்காது பேழையுள் உறங்குகிறது!

அவருக்கு எனது செவ்வஞ்சலி!

ஆழ்ந்த கவலையோடு,

ப.வி.ஸ்ரீரங்கன்
18.12.2007

%d Bloggern gefällt das: