பல்கலைக்கழக மாணவர் ஆர்பாட்டம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கும்,இலங்கை வன்முறை ஜந்திரத்துக்குமான முரண்பாடு „மாவீரர்“ தின அநுஷ்டிப்புக்கான தார்மீகவுரிமை மறுப்பிலிருந்து தொடங்கியதாம்!

யோசித்துப் பார்க்கவேண்டும்.

தமிழ்பேசும் மக்களது அனைத்துப் பிரதேசமெங்கும் பல்லாயிரம் இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு 14 பேருக்கு ஒரு, இராணுவத்தான்(ள்) வீதம் தமிழ்பேசும் மக்களது வாழ்விடமெங்கும் இலங்கையின் வன்முறை ஜந்திரம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இது கடந்த 20 வருடமாகத் தொடரும் நிலையாகும்.

புலிகள் அழிக்கப்பட்டு,“தமிழீழ“போராட்டம் கொலை செய்யப்பட்ட பின்னும் „அதே“ இராணுவம் எந்த மாற்றமுமின்றித் தொடர்ந்து தமிழ்ப் பிரதேசமெங்கும் அனைத்துச் சிவில் சமூக நகர்வையும் தடுத்தபடியே தனது காட்டாட்சியை-இராணுவ ஆட்சியைத் தொடர்ந்து நடாத்தி வருகிறது.

இலங்கையினது  தென் மாகாணங்களில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளும்,குடிசார் அமைப்புகளும் பலமாக இருக்க – ஜனநாயகச் செயற்பாடுகளை அவர்கள்(சிங்கள மக்கள்) ஒரளவு நுகர-வடக்குக் கிழக்கு மாகாணமானது இராணுவத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் அனைத்து வகைச் சமூகவசைவியத்தையும் தனக்குள்(இராணுவ ஆட்சிக்குள்) உட்கொண்டபடியேதாம் இருக்கிறது.

இங்கு,கேள்வி எழுகிறதில்லையா?

பல்கலைக் கழக மாணவர்கள் „மாவீரர் தின“ அநுஷ்டிப்புக்காகத் தமது தார்மீவுரிமைக்காகப் போராடுகிறார்களா?
Bild
அப்படியாயின், சிங்கள இராணுவமானது, போர் முடிவுக்குக் கொணர்ந்து மூன்றாண்டுகள் கடந்தும் தனது கொடுங்கரத்துள் தமிழ்பேசும் மக்களைக் கட்டிப்போட்டிருக்கும் இந்தக் கொடுமையான காட்டாட்சியைக் குறித்துப் இவ்வளவு காலமும்(யாழ்ப்பாணம் சுமார் 15 வருடமாக)பொறுத்துக் கொண்டார்களா மக்கள்-மாணவர்கள்?

„இராணுவமே போர் முடிந்துவிட்டது.நீ உனது பழைய நிலைகளுக்குப் போ!“
„அரசே மக்களைச் சுயாதீனமாகச் செயற்பட விடு!“

„அரசே மக்களை இராணுவ அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் குடிசார் அமைப்புகளுக்கு வழி விடு!“

„அரசே உனது இராணுவக் காட்டாட்சியைத் தமிழ்பேசும் மக்களது வலயத்திலிருந்து அப்புறப்படுத்து!“

„அரசே,நீதியையும்,நியாயத்தையும் நிலைநாட்ட சிவில் சமூகவுரிமைகளை மதித்து அரச வன்முறைகளை நிறுத்து“

இவை போன்ற குடிசார் அமைப்பாண்மை முகிழ்க்கும் முன் நிபந்தனைக் கோசங்களை ஏன் முன்வைக்க முடியவில்லை?

மாவீரர் தின அநுஷ்டிப்பைவிட இதுவே, மக்களது அவசியமான-அதி முக்கியமான பிரச்சனையாகவிருக்கிறது.

இதை மௌனித்துக்கொண்டிருந்த ஒரு மாணவர் சமுதாயம்,மாவீரர் தினத் தார்மீகவுரிமைக்கான கோரிக்கை-உரிமையென முரண்படுவது பெரிய சந்தேகத்தைத் தருகிறது.

ஒரு புறம்,உலகத்தில் மாணவர்களையும்,மக்களையும் தமக்கேற்பப் பயன்படுத்தி அயலட்ட தேசத்துள் நிலவும் ஆட்சிகளை வீழ்த்தும்“அரபுப் புரட்சி,வசந்தம்,ஆட்டுக்குட்டி“எல்லாம் சிரியாவிலும் கிழிந்து தொங்குகிறது.

இதுவொரு ஆரம்பம்!

இலங்கையில் இனங்கடந்து மாணவர்கள் இணைகிறார்களாம்.

பார்ப்போம்,எவருக்காக,எவர் போராடுகிறார்களென்று-சாகிறார்களென்று!

அமெரிக்க,மேற்குலகுக்காகச் சாகும் சிரியாவின் மக்கள் இலங்கைக்குக் கற்றுக் கொடுக்கப் பலவுண்டு!

பிளவுபட்ட மூலதனமானது ஆசிய-மேற்குலக ஆதிக்கப் போட்டியான முகாந்திரத்துள் அனைத்துலகத்திலும் பல வடிவில் „மக்கள்-மாணவர்கள்“போராட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது!

இதுள்,“மாவீரர்“தின அநுஷ்டிப்புக்கான தார்மீகவுரிமையின் மாணவர் கலகம், எந்த ரூபத்தில் உரு மாற்றங் கொள்வதென்பதையும் காலம் உணர்த்திச் செல்லும்!

ப.வி.ஸ்ரீரங்கன்
03.12.2012

One Response to பல்கலைக்கழக மாணவர் ஆர்பாட்டம்

  1. Pingback: இந்தியாவுக்கும்,வீன் பல்கலைக் கழகத்துக்கும் … « பேரிகை

Hinterlasse einen Kommentar